நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் கூட்டணி; நெகிரி மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஆலயமும் உடைபடவில்லை: அருள்குமார்

நீலாய்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த ஆலயமும் உடைபடவில்லை.

மாநில மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் முழுமை பெற மக்கள் நம்பிக்கை கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நீலாய் சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் ஜெ. அருள்குமார் வலியுறுத்தினார்.

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், இம்முறை நீலாய் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுவதாக தெரிவித்தார்.

ஆலயங்கள் தொடர்பாக முழுமையான தகவல்களைப் பெற்ற பிறகே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை சுமார் 30 ஆலயங்களுக்கு நிலப்பட்டா பெற்றுத் தருவதில் தாம் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாநிலத்தில் ஆலயங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டுமானால் அது மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய நடைமுறை இருப்பதால், ஆலயங்கள் இடிக்கப்படும் சம்பவங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாம் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பில் இருந்தபோது ஆலயங்களுக்கும் தமிழ்ப்பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கியதாகவும், கடந்த எட்டு ஆண்டுகளில் மேம்பாட்டு நிறுவனங்களால் ஆலயங்கள் இடிக்கப்பட்டதாக எந்தப் புகாரும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

வீடமைப்புத் திட்டங்கள் குறித்து பேசிய அவர், நெகிரி மாநில வீடமைப்புத் திட்டங்களில் 50 விழுக்காடு வீடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், அரசின் வழியாக விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பெறலாம் என்றும் கூறினார்.

அதேவேளை, RRM@N9 கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் பலர் சொந்த வீடுகளை வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிஆர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டில் நீலாயில் 400 அடுக்குமாடி வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும், பாஜாமிலிருந்து நீலாய் செல்லும் சாலை ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்தாண்டு மாநில வரவு செலவுத் திட்டத்தில் அந்தச் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், நீலாயில் புதிய பொதுச் சந்தை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தற்போது தொடங்கப்பட்டுள்ள அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்று அவர் உறுதியளித்தார்.

தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இணைந்து செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக இந்தியர்கள் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset