நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் கல்வி கனவு நனவாகுவதற்கு முன்பே சாலை விபத்தில் லாவண்யாவின் உயிர் பிரிந்தது

ஊத்தான் மெலிந்தாங்:

உயர் கல்வியை தொடர வேண்டும் என்ற கனவை மனதில் சுமந்தபடி, அதற்கான நாளை எதிர்நோக்கி தற்காலிகமாக வேலைக்குச் சென்று வந்த 19 வயது இளம்பெண் லாவண்யா முருகனின் வாழ்க்கைப் பயணம், எதிர்பாராத சாலை விபத்தில் சோகமாக முடிவடைந்தது.

குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் சென்றிருந்த லாவண்யா, சூழ்நிலை சீரானதும் தனது உயர்கல்விக் கனவை நனவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால், அந்தக் கனவு நனவாகும் முன்பே நிகழ்ந்த இந்த விபத்து, அவரது இளம் உயிரை பறித்ததுடன், எதிர்கால நம்பிக்கைகளையும் ஒரே நொடியில் சிதைத்துள்ளது.

கல்லூரி வளாகத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற ஆசையை தற்காலிகமாக ஒதுக்கிவைத்து, குடும்பத்திற்கு துணையாக வேலைக்குச் சென்று வந்த லாவண்யா, கடந்த ஜூலை 16ஆம் தேதி மாலை 4.45 மணியளவில் பாகான் டத்தோ மாவட்டத்திலுள்ள ஊத்தான் மெலிந்தாங் சாலையின் 19ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார்.

தலை மற்றும் கழுத்தில் கடுமையான காயங்களுடன் தெலுக் இந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடிய போதிலும், நேற்று ஜூலை 17ஆம் தேதி காலை 9.22 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை உறுதிப்படுத்தியதை பாகான் டத்தோ மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் அலி பின் முகமட் ஜாலி தெரிவித்தார்.

போலிசார் முதற்கட்ட விசாரணையில், உள்ளூரைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் ஓட்டி வந்த நிஸான் ரிஜிட்/டிப்பர் வகை லோரி, அருகிலிருந்த உணவகத்திற்குச் செல்வதற்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும், அப்போது
அதே திசையில் வந்த லாவண்யா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், லோரியின் பின்புற வலது பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட லோரி மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் புஸ்பாகோம் (PUSPAKOM) தொழில்நுட்ப பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறிய
சூப்பிரிண்டெண்ட் முகமட் அலி, இவ்விபத்து 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள், போக்குவரத்து புலன் விசாரணை அதிகாரி நோர்மா பிந்தி அபு ஹசானை 010-536 4619 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset