நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்: சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல் 

சிரம்பான் - 

16ஆவது நெகிரி செம்பிலான மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

மாநில தேர்தல் காரணமாக சமூக ஊடகங்களைப் பொதுமக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவதூறு, தூண்டுதல், அவமதிப்பு, ஆத்திரமூட்டல் மற்றும் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

பொது அமைதியைக் குலைக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு உள்ளடக்கத்தையும் பரப்புவதை காவல்துறை மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமட் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களின் சமூக ஊடகத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், இனம், மதம், அரச குடும்பம் (3R) அல்லது தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக வெறுப்பு, பகைமை, மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களைப் பதிவேற்றவோ, பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக காவல்துறை சமரசம் செய்துகொள்ளாது என்றும், நடைமுறையிலுள்ள சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓர் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் சமூக ஊடக உள்ளடக்கங்கள் மீதான கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்தும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அல்சாஃப்னி கூறினார். 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் ஜூலை 18ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset