செய்திகள் மலேசியா
பொது மருத்துவமனைகளில் புதிய ட்ரையாஜ் முறை அமல்படுத்தப்படுகிறது: நோயாளி மதிப்பீடு மேலும் துல்லியம்
கோலாலம்பூர்:
அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலையைத் துல்லியமாக மதிப்பிட்டு, சிகிச்சை தாமதத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில், மலேசிய சுகாதார அமைச்சு (KKM) பொது மருத்துவமனைகளின் "Emergency & Trauma Department"-இல் புதிய Malaysian Triage Scale (MTS) 2022 முறையை அமல்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய முறையின் கீழ், 2011-ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த மூன்று நிலை வண்ண அடிப்படையிலான ட்ரையாஜ் வகைப்பாடு, தற்போது ஐந்து நிலைகளைக் கொண்ட விரிவான மதிப்பீட்டு முறையாக மாற்றப்பட்டுள்ளது.
இதில், நிலை 1 (உயிர்காக்கும் அவசர சிகிச்சை) முதல் நிலை 5 (வழக்கமான சிகிச்சை) வரை நோயாளிகள் அவர்களின் உடல்நிலையின் தீவிரத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படுவார்கள்.
KKM-ன் விளக்கத்தின்படி, புதிய ட்ரையாஜ் முறை இரண்டு கட்டங்களாக செயல்படும். முதற்கட்டமான Primary Triage-இல் நோயாளியின் உடல்நிலை விரைவாக மதிப்பிடப்படும். பின்னர், Secondary Triage-இல் உயிரியல் அறிகுறிகள், மருத்துவ விவரங்களின் அடிப்படையில் விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும், குழந்தைகளின் உடலியல் தேவைகள் பெரியவர்களிடமிருந்து மாறுபடுவதால், சிறுவர் நோயாளிகளுக்கென தனித்துவமான மதிப்பீட்டு அளவுகோல்களும் இந்த முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
"இந்த மாற்றம் நோயாளிகளை மிகவும் துல்லியமாக வகைப்படுத்த உதவுவதோடு, தேவையற்ற நெரிசலைக் குறைத்து, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின்றி புறக்கணிக்கப்படுவதைத் தடுக்கும்," என்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் KKM தெரிவித்துள்ளது.
சமீப காலமாக, அவசர சிகிச்சை தாமதம் தொடர்பான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடனடி சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
KKM-ன் கூற்றுப்படி, ட்ரையாஜ் முறை என்பது "முதலில் வருபவருக்கு முதலில் சிகிச்சை" என்ற அடிப்படையில் செயல்படுவதல்ல; மாறாக, நோயாளியின் உடல்நிலையின் தீவிரம், உடனடி சிகிச்சைத் தேவையை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முறையாகும்.
சேவையின் தரத்தை மேலும் உயர்த்தும் நோக்கில், மாநில அளவில் EMTS ட்ரையாஜ் தொழில்நுட்பக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மருத்துவமனைகளுக்கு இடையிலான மருத்துவத் தணிக்கைகள், நடைமுறை மதிப்பீடுகள், ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறை பயிற்சி திட்டங்களை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், MyTriage App எனும் செயலியும் மருத்துவ பணியாளர்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சி கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மனிதப் பிழைகளைக் குறைத்து, மதிப்பீட்டின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக, 'Undertriage' எனப்படும் தவறான குறைந்த முன்னுரிமை மதிப்பீட்டு விகிதமும் முக்கிய செயல்திறன் குறியீடாக (KPI) தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக KKM தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், ஜூன் 2026 முதல் புதிய நோயாளி ஓட்ட மேலாண்மை வழிகாட்டுதலும் அமலுக்கு வந்துள்ளது. அதன் கீழ், அவசரமற்ற நோயாளிகள் அரசு சுகாதார நிலையங்கள் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு, Skim Perubatan MADANI, PeKa B40 போன்ற திட்டங்கள் வழியாக மாற்றி அனுப்பப்படுவார்கள்.
மேலும், முதன்மை சிகிச்சைக் குழு தாமதமானால், அவசர மருத்துவ நிபுணர்களுக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்திற்குள் நோயாளியை வார்டில் அனுமதிக்கும் முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.
"இந்தச் சீர்திருத்தம், சுகாதார சேவைச் சங்கிலி முழுவதையும் வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சியாகும். கடுமையான கண்காணிப்பு, துல்லியமான ட்ரையாஜ் முறை, திறமையான நோயாளி மேலாண்மை மூலம், இதுபோன்ற சிகிச்சை தாமதங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதில் KKM உறுதியாக செயல்பட்டு வருகிறது," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 5:43 pm
'பண்ட் ஷாங்காய்' குடியிருப்புக்கு DBKL கடும் நடவடிக்கை: உத்தரவை மீறிய JMB-க்கு நோட்டீஸ்
July 3, 2026, 4:47 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்: ரவீன்குமார்
July 3, 2026, 4:36 pm
ஜொகூர் தேர்தல்: பழைய விவகாரங்களை துடைத்தொழித்து முதிர்ச்சியான அரசியலை முன்னெடுங்கள்
July 3, 2026, 4:10 pm
சட்ட மீறல்களுக்குப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தவறான நடத்தைக்கு சிறைத்துறை கடும் எச்சரிக்கை
July 3, 2026, 4:00 pm
