நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்ட மீறல்களுக்குப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தவறான நடத்தைக்கு சிறைத்துறை கடும் எச்சரிக்கை

கோலாலம்பூர்: 

பேராக் மாநிலம், தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஐந்து சிறைக் காவலர்கள் மீது இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டவிரோதமான எந்தவொரு தவறான செயலுக்கும் மலேசிய சிறைத்துறை ஒருபோதும் சமரசம் செய்யாது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுக்குத் தாங்கள் முழு மரியாதை அளிப்பதாக சிறைத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், அரச மலேசிய காவல்துறை (PDRM), சட்டத்துறை, நீதித்துறை அமைப்புகளுடன் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, நீதி நடைமுறை வெளிப்படையாகவும், நியாயமாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் நடைபெறுவதை உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

"தேசிய திருத்தச் சேவையின் முன்னணி அமைப்பாக செயல்படும் மலேசிய சிறைத்துறை, நேர்மை, தொழில்முறைத் திறன், பொறுப்புணர்வு ஆகிய அடிப்படைக் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறது.

"சட்டத்தை மீறும் எந்தவொரு தவறான நடத்தையையும், அல்லது இந்த நிறுவனத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் எந்தச் செயலையும் சிறைத்துறை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது," என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தைப்பிங் சிறையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து சிறைக் காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழும், மற்ற மூவர் பிரிவு 323-ன் கீழும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறைக் காவலர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 304(b)-ன் கீழ் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஒவ்வொரு நபருக்கும் நியாயமான விசாரணை பெறும் உரிமை உண்டு என்பதையும், நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கும் வரை அனைவரும் குற்றமற்றவர்களாகவே கருதப்பட வேண்டும் என்ற சட்டக் கொள்கையைச் சிறைத்துறை மதிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடந்து வரும் நீதிமன்ற விசாரணையைப் பாதிக்கும் வகையில் யூகங்கள், வதந்திகள் அல்லது பொறுப்பற்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களிடம் சிறைத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கு சட்ட நடைமுறைகளின்படி நிறைவடையும் வரை, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் சிறைத்துறை உறுதியளித்துள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset