நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் கடவுச்சீட்டைக் காட்டி ரோன்95 நிரப்பி வைரலான காணொலி: ‘மலேசியர்களைக் கோபப்படுத்தவே செய்தேன்’ எனக் கூறிய நபருக்குக் கடும் கண்டனம்

கோலாலம்பூர்: 

தன்னை சிங்கப்பூர் குடிமகன் எனக் கூறிக்கொண்ட ஒருவர், மலேசியாவில் மானிய விலையில் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோலை நிரப்பிக்கொண்டபோது தனது சிங்கப்பூர் கடவுச்சீட்டைக் காட்சிப்படுத்திய வீடியோவைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளின் இணையவாசிகளிடமிருந்தும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

@theblackspice என்ற சமூக ஊடகக் கணக்கில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவுக்கு, "சிங்கப்பூரராக இருந்து மலேசியர்களைக் கோபப்படுத்துவது எப்படி? முதல் படி: அவர்களின் பெட்ரோலைத் திருடுங்கள்" என்ற சர்ச்சைக்குரிய வாசகம் இணைக்கப்பட்டிருந்தது.

வைரலான அந்தக் காணொலியில், சம்பந்தப்பட்ட நபர் சிங்கப்பூர் கடவுச்சீட்டைப் போன்று தோற்றமளிக்கும் ஆவணத்தைக் கேமராவிடம் காட்டுகிறார். பின்னர், காட்சி எரிபொருள் நிரப்பும் இயந்திரத்துக்கு மாறி, 'Premium 95' என்ற குறிப்பு தெளிவாகத் தெரியும் நிலையில் வாகனத்தில் ரோன்95 பெட்ரோல் நிரப்பப்படுவது பதிவாகியுள்ளது.

எனினும், கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் அந்தப் பதிவு, எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல், மலேசியர்கள் மட்டுமின்றி சிங்கப்பூர் இணையவாசிகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பலர், இந்தச் செயலைப் பொறுப்பற்றதும் வெட்கக்கேடானதுமாக விமர்சித்தனர்.

பல சமூக ஊடகப் பயனர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, நகைச்சுவை, கிண்டல் கலந்த கருத்துகளையே பதிவு செய்தனர். குறிப்பாக, "சிங்கப்பூரில் பெட்ரோல் வாங்க முடியாதவரை அடையாளம் காணும் எளிய வழி இதுதான்" என்ற வகையிலான கருத்துகள் அதிக கவனத்தைப் பெற்றன.

இதற்கிடையில், சில இணையவாசிகள் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர், ஜொகூர் பாருவில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வாகனத்தை வாடகைக்கு எடுத்திருக்கலாம் என்றும், அத்தகைய வாகனங்களுக்கு ரோன்95 எரிபொருள் நிரப்ப அனுமதி இருப்பதால், தனது சிங்கப்பூர் கடவுச்சீட்டை வேண்டுமென்றே காட்சிப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்த முயன்றிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset