நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'நாங்கள் அஞ்சியது நடந்தேறிவிட்டது': 150 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் விழுந்ததில் வீடு, வாகனங்கள் சேதமடைந்தன 

ஜார்ஜ்டவுன்: 

"நாங்கள் அஞ்சிக் கொண்டிருந்ததே இறுதியில் நிஜமாகிவிட்டது," என்று ஜாலான் பத்து காந்துங்கில் உள்ள இருமாடி வரிசை வீட்டின் உரிமையாளர் அமர்ஜித் கவுர் (82), சுமார் 150 ஆண்டுகள் பழமையான மரம் தனது வீட்டின் மீது சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய சம்பவத்தையடுத்து வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் வேலி, கூரையின் ஒரு பகுதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அமர்ஜித் கவுரின் கூற்றுப்படி, மரம் முறிந்து விழும் அபாயம் குறித்து தனது கணவரும் அப்பகுதி குடியிருப்பாளர்களும் பலமுறை பினாங்கு மாநகராட்சி (MBPP)-யிடம் புகார் அளித்திருந்தனர்.

இருப்பினும், மரத்தின் கிளைகளை வெட்டும் நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், முழுமையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

"நாங்கள் அஞ்சியதே இன்று நடந்துவிட்டது. ஆனால், இதற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? சம்பவ இடத்திற்கு மக்கள் பிரதிநிதிகளோ அல்லது MBPP-யின் உயரதிகாரிகளோ யாரும் வராததே அதைவிட வேதனையளிக்கிறது.

"எங்கள் குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசும் MBPP-யும் இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்," என்று ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அவர் வலியுறுத்தினார்.

சம்பவம் நிகழ்ந்தபோது, தலைநகரிலிருந்து திரும்பிய தனது மகனுடன் வெளியே சென்றிருந்ததாக அமர்ஜித் தெரிவித்தார். பின்னர் இரவு 7.52 மணியளவில் தனது கணவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் கூறினார்.

மரம் வீட்டின் வெளியேறும் பாதையை முற்றிலும் மறித்ததால், அவரது கணவரால் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டார். உடனடியாக அவர் தீயணைப்பு, மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார்.

"இந்த விபத்தில் எங்கள் வீட்டின் கார் நிறுத்துமிடக் கூரை, பூந்தோட்டம், வேலி, மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இருப்பினும், எங்கள் குடும்பத்தினருக்கு எந்தவித காயமோ உயிரிழப்போ ஏற்படாதது மட்டுமே ஆறுதலாக உள்ளது.

இதனிடையே, அவரது மகன் பர்வீன் சித்து (49), தனது பெற்றோர் 1994 முதல் அந்த வீட்டில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டார். முழுமையான பழுதுபார்ப்பு நடைபெறும் வரை அந்த வீடு வசிப்பதற்குப் பாதுகாப்பான நிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"என் பெற்றோர் தற்போது ஓய்வுபெற்றவர்கள்; அவர்களுக்கு நிலையான வருமானம் இல்லை. எனவே, MBPP உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒரு வாரத்திற்குள் வீட்டின் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, அருகிலுள்ள முதியோர் பராமரிப்பு மையத்தின் மேற்பார்வையாளர் எஸ். காயத்ரி (36), மரம் அந்த மையத்தின் முன்பாக இருந்தபோதிலும், கட்டிடம் பாதிக்கப்படாதது பெரும் நிம்மதியை அளித்ததாகக் கூறினார்.

"65 முதல் 90 வயதுக்குட்பட்ட 13 முதியவர்கள் இங்கு தங்கியுள்ளனர். மரம் எங்கள் வளாகத்தின் மீது விழுந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நினைத்தாலே நடுங்குகிறது. இந்த அபாயம் குறித்து நாங்களும் பலமுறை MBPP-யிடம் புகார் அளித்திருந்தோம்," என்றார் அவர்.

முன்னதாக, இந்த மரம் இரு வீடுகளின் மீது சாய்ந்து விழுந்ததில், வெளியேறும் பாதை மறைக்கப்பட்டதால் ஒரு முதியவர் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

பாயா தெருபோங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு தளபதி முஹம்மத் ஜைனி ஜைனுடின், இந்தச் சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு இரவு 8.48 மணியளவில் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset