நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறை கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை வார்டன்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

தைப்பிங்- 

தைப்பிங் சிறைச்சாலையில் கடந்த 2025 ஜனவரியில் கைதி ஒருவர் மரணமடைந்ததற்கும், மூன்று கைதிகள் காயமடைந்ததற்கும் காரணமான வன்முறைச் சம்பவம் குறித்து அரச மலேசிய போலீஸ் படை (PDRM) விரிவான விசாரணை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து சிறை வார்டன்கள் மீது ஜூலை 3 வெள்ளிக்கிழமை காலை தைப்பிங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கின் விசாரணை அறிக்கை தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு (AGC) அனுப்பப்பட்டு, ஜூன் 29 அன்று ஒப்புதலுடன் திருப்பி அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட ஐந்து வார்டுகளுக்கும் எதிராக தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2025 டிசம்பரில் ஒரு வார்டன் மீது கொலைக் குற்றமாகாத மரணத்தை விளைவித்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் வார்டன்களில், ஒரு வார்டன் மீது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக பிரிவு 323-இன் கீழ் குற்றஞ்சாட்டப்படும் (ஓராண்டு வரை சிறை அல்லது 2,000 ரிங்கிட் அபராதம்). மேலும் இரு வார்டன்கள் மீது பொதுவான நோக்கத்துடன் காயம் விளைவித்ததற்காக பிரிவு 323 மற்றும் 34-இன் கீழும், மற்றுமொரு இரு வார்டன்கள் மீது ஆயுதங்களைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தியதற்காக பிரிவு 324 மற்றும் 34-இன் கீழும் (10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி) குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

நீதிமன்ற விசாரணை மற்றும் குற்றச்சாட்டு நடைமுறைகள் தொடங்கவிருப்பதால், நாட்டின் குற்றவியல் நீதி கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து, பொதுமக்கள் இந்த விவகாரம் குறித்து எந்தவொரு ஊகங்களையும் செய்யவோ அல்லது உண்மைகளைத் திசைதிருப்பவோ வேண்டாம் என்று டத்தோ எம். குமார் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த மே 25 அன்று மலேசிய மனித உரிமை ஆணையம் (SUHAKAM) இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தது.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset