நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திவேட் கல்வி மூலம் 2030க்குள் 3.3 மில்லியன் வேலை வாய்ப்புகள்: மலேசியாவின் பொருளாதாரப் புரட்சிக்கு டத்தோஸ்ரீ ரமணன் அழைப்பு

கோலாலம்பூர்:

புதிய தொழில் துறை முதன்மைத் திட்டத்தின் கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3.3 மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான வேலைவாய்ப்புச் சந்தையை உருவாக்கும் முயற்சியில் மலேசியா களமிறங்கியுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியில் திவேட் ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.

இதன் மூலம் சுமார் 700,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பங்சாரில் இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான தேசிய திவேட் பயிற்றுவிப்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட மைய மேலாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் இந்த இலக்குகளை முன்வைத்தார்.

திறன் மேம்பாட்டுத் துறை, பயிற்றுவிப்பாளர் பயிற்சி, மேம்பட்ட திறன் மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, நாட்டின் திவெட் சுற்றுச்சூழல் அமைப்பின் திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய தளமாக விளங்குகிறது.

13ஆவது மலேசியத் திட்டத்தின் தொடக்கத்துடன், நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 77,200 ரிங்கிட் என்ற இலக்கை எட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.

பிரதமரின் திவேட் 2.0 உயர் திறன்கள் எனும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இனிவரும் காலங்களில் உயர்வளர்ச்சி, உயர் மதிப்புள்ள துறைகளில் மட்டுமே கல்வி, பயிற்சி முறைகள் கவனம் செலுத்தும்.

இதற்காக, அரசு மற்றும் தொழில்துறையின் கூட்டு முதலீட்டுடன், முதுகலை அளவிலான தொழிற்கல்விப் பயிற்சிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

இந்த மாநாட்டின் மிக முக்கியமான நிகழ்வாக, 2026-2030 ஆண்டுகளுக்கான ஜே.பி.கே. சர்வதேசமயமாக்கல் செயல் திட்டத்தை டத்தோஸ்ரீ ரமணன் அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம், மலேசிய திறன் சான்றிதழ்கள், தேசிய தொழில்முறை திறன் தரநிலைகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று, சர்வதேச சந்தையில் நம் நாட்டுத் தொழிலாளர்களின் மதிப்பினை உயர்த்தும்.

மேலும் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு யுகத்திற்கு ஏற்ப, திறன் மேம்பாட்டுத் துறையில் 'வார் ரூம்' அமைக்கப்பட்டு, 150 ஏஐ திறன் கொண்ட அதிகாரிகள் உருவாக்கப்படுவார்கள்.

அதேசமயம், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் பயனடையும் வகையில் முந்தைய சாதனைகளுக்கான அங்கீகாரம் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தொழில்துறை சார்ந்த சூழலியல் முறைமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், 2025-ஆம் ஆண்டில் திவெட் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைக் கடந்து சாதனை படைத்திருப்பதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset