நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைபர் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த ஃப்ளெக்ஸி பார்க்கிங், ஸ்மார்ட் செலாங்கூர் பார்க்கிங் செயலிகள்: 'காணாமல் போன கிரெடிட்' குறித்து பயனர்கள் அதிருப்தி

கோலாலம்பூர்:

சைபர் தாக்குதலால் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸி பார்க்கிங், ஸ்மார்ட் செலாங்கூர் பார்க்கிங் செயலிகளின் சேவைகள் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நிறுவனங்களும் இன்று அறிவித்துள்ளன. இதனால், பயனர்கள் வழக்கம்போல் பார்க்கிங் கட்டணங்களை மீண்டும் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் செலாங்கூர் பார்க்கிங் இன்று காலை தனது ஃபேஸ்புக் பதிவில், "எங்களின் செயலி சேவை மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது. பயனர்கள் தற்போது பார்க்கிங் கட்டணங்களைச் செலுத்தலாம்," என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், நாடு முழுவதும் 64 உள்ளூராட்சி மன்றங்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளெக்ஸி பார்க்கிங் செயலியும், தனது சேவை மீண்டும் இணையத்தில் இயங்குவதாக அறிவித்துள்ளது.

எனினும், சேவை மீண்டும் தொடங்கியிருந்தாலும், சில பயனர்கள் தாங்கள் செயலியில் ரீலோட் (Reload) அல்லது டாப்-அப் (Top-up) செய்த கிரெடிட் தொகை காணாமல் போயிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பதிலளித்த ஃப்ளெக்ஸி பார்க்கிங், சில பயனர்கள் இன்னும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டுவருவதை தாங்கள் அறிந்திருப்பதாகவும், ஒவ்வொரு புகாரையும் தனித்தனியாக ஆய்வு செய்து, வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் உரிய உதவியை வழங்க வாடிக்கையாளர் சேவைக் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, ஃப்ளெக்ஸி பார்க்கிங், ஸ்மார்ட் செலாங்கூர் பார்க்கிங் ஆகிய இரு நிறுவனங்களும், தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொள்ளும் பயனர்கள் தங்களது பிரச்சினைகளை எவ்வாறு அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யலாம் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளன.

மேலும், செயலி தொடர்பான புகார்கள், விசாரணைகள் அதிக அளவில் வந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு, அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் உரிய தீர்வு வழங்கப்படும் என ஃப்ளெக்ஸி பார்க்கிங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset