நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்ப்பின் 6 உயர் அதிகாரிகள் மீதான விசாரணை தொடர்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

எச்ஆர்டி கோர்ப்பின் முறைகேடு புகார்கள் தொடர்பாக, அதன் ஆறு உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுக் கணக்குக் குழு (பி.ஏ.சி), தலைமை கணக்காய்வாளர் அறிக்கை (எல்.கே.ஏ.என்), மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) ஆகிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் அமைச்சர் இதனை உறுதிப்படுத்தினார்.

தற்போது இந்த அதிகாரிகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை எச்.ஆர்.டி கார்ப்பரேஷன் உறுதி செய்வதாகவும், நிதி நிறுவனத்தின் ஒருமைப்பாடு, நலனைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

எச்.ஆர்.டி கோர்ப்பின் நிதி மேலாண்மை, மெனாரா இக்லாஸ் சொத்து கையகப்படுத்தல் மற்றும் பங்கு முதலீட்டு மேலாண்மை தொடர்பான பல்வேறு புகார்கள் குறித்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வசூலிக்கப்பட்ட நிதியை அதிக ஆபத்துள்ள முதலீடுகளுக்குப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுக் கணக்குக் குழு முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில், எச்ஆர்டி கோர்ப் தனது முதலீட்டு நிதி தொகுப்பை மறுசீரமைத்து, நிதி மேலாண்மையை வலுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முறையான மறுசீரமைப்பு, ஒழுக்கமான முதலீட்டு மேலாண்மைத் திட்டத்தின் மூலம், நடப்பாண்டில் மட்டும் சுமார் 270.72 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகளை அந்த நிறுவனம் மீட்டெடுத்துள்ளது.

மேலும், அதிக ஆபத்துள்ள சொத்துகளில் முதலீடு செய்யும் விகிதத்தை 21.6 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விசாரணை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்வதாக டத்தோஸ்ரீ ரமணன் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset