நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிபொருள் மானியச் செலவு 40 பில்லியனை எட்டும் அபாயம்; உலக எண்ணெய் விலை உயர்வால் அரசுக்குப் பெரும் சுமை: அன்வார்

கோலாலம்பூர்: 

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தற்போதைய நிலையில் தொடருமானால், 2026ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மானியத்திற்காக அரசாங்கம் ஏறத்தாழ 40 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட வேண்டிய நிலை உருவாகலாம் என பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகை, 2026 வரவு-செலவுத் திட்டத்தில் எரிபொருள் மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட 15 பில்லியன் ரிங்கிட்டை விட இரண்டு மடங்குக்கும் அதிகம் என்பதால், அரசின் நிதிச்சுமை கணிசமாக அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரோன்95 பெட்ரோல், டீசலுக்காக மாதந்தோறும் சுமார் 800 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்ட நிலையில், உலக எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அந்தச் செலவு மாதத்திற்கு சுமார் 5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது என்று அன்வார் விளக்கினார்.

இந்த அதிகரித்த மானியச் செலவினால், 16 வயது, அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும் ரோன்95 பெட்ரோலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற மானிய விலையில் தொடர்ந்து பெற முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனிநபர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய பொருளாதாரத் துறைகளும் இந்த மானியத்தின் பயனை அனுபவித்து வருகின்றன. மீனவர்களுக்கு லிட்டருக்கு 1.65 ரிங்கிட் விலையில் டீசல் வழங்கப்படுவதுடன், தீபகற்ப மலேசியாவில் உள்ள 2.1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், சிறு தோட்ட உரிமையாளர்களுக்கான BUDI Agri-Komoditi திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, உலக எண்ணெய் விலை உயர்வை கருத்தில் கொண்டு 200-இல் இருந்து 400 ரிங்கிட்டாக தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு, மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பு (SKDS 1.0) மூலம் லிட்டருக்கு 1.88 ரிங்கிட் விலையில் டீசல் வழங்கப்படுகிறது.

அதேபோல், சபா, சரவாக்கில் செயல்படும் தகுதியான சரக்கு, தளவாட நிறுவனங்களுக்கு, லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற மானிய விலையில் டீசல் வழங்கப்படுவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இதனுடன், படகு இயக்குநர்கள், ஜெனரேட்டர் பயன்படுத்துபவர்கள், கிராமப்புறங்களில் நீர்ப்பம்புகளைப் பயன்படுத்தும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட இலக்கு குழுக்களும் MyKad முறையின் மூலம் BUDI Diesel உதவித் திட்டத்தின் பயனைப் பெற தகுதியுடையவர்கள் என அவர் கூறினார்.

நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் தற்போது நிலையானதாகவும் போதுமானதாகவும் இருப்பதாக தெரிவித்த அன்வார், உலகளாவிய விநியோக நெருக்கடி நீடிக்கும் வரை நீண்டகால விநியோகப் பாதுகாப்பு, இலக்கு அடிப்படையிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று உறுதியளித்தார்.

"வாழ்க்கைச் செலவு உயர்வாலும், உலகளாவிய விலை ஏற்றத்தாலும் அதிகம் பாதிக்கப்படும் மக்களைத் தொடர்ந்து பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அதேவேளையில், மானிய உதவிகள் நீடித்தும், இலக்கு அடிப்படையிலும் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசின் நிதிநிலையும் மானியச் செலவுத் திறனும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்," என்று அன்வார் வலியுறுத்தினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset