செய்திகள் மலேசியா
கோலாலம்பூர்–சிலாங்கூரில் வெள்ளத்திற்கு நிரந்தரத் தீர்வு?: புதிய வெள்ள நீர்த்தேக்கக் குளங்களுக்கு ஹன்னா யோ அறிவிப்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூர், சிலாங்கூரில் பலமுறை ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், எதிர்காலத்தில் எந்தவித மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் மாற்றப்படாத, சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் கூடுதல் வெள்ள நீர்த்தேக்கக் குளங்கள் அமைக்கப்படும் என பிரதமர் துறையின் (கூட்டாட்சிப் பகுதிகள்) அமைச்சர் ஹன்னா யோ அறிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவு தொடர்பாக, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL), சிலாங்கூர் மாநில அரசின் சிறப்புப் பணிக்குழுக்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"கோலாலம்பூர், சிலாங்கூரின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விற்கப்படாத, மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படாத நிரந்தர வெள்ள நீர்த்தேக்கக் குளங்களை உருவாக்குவது குறித்து சிலாங்கூர் அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் டேவான் ராக்யத்தில் தெரிவித்தார்.
மேம்பாட்டுத் திட்டங்களின் பெயரில் வெள்ளத் தடுப்பு முக்கியப் பகுதிகள் இனி பாதிக்கப்படமாட்டா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது 16 உள்ளூர் மழைநீர் தேக்கக் குளங்கள் (On-Site Detention – OSD) அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் இருப்பதாகக் கூறினார்.
அவற்றில் ஒன்பது குளங்கள் முழுமையாக முடிவடைந்துள்ளன, ஐந்து குளங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்றும், மேலும் இரண்டு குளங்கள் கட்டுமானத்தில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனியார் நிறுவனங்கள், வீட்டு மேம்பாட்டாளர்களும் மழைநீரைச் சேமிக்கும் OSD குளங்களைக் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது கோலாலம்பூரில் 65 OSD குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ள நீர்த்தேக்கக் குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டத்திற்கும், நீர்ப்பாசன, வடிகால் துறை (JPS), சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நிர்ணயித்த அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே DBKL திட்டமிடல் அனுமதி வழங்கும் என ஹன்னா யோ வலியுறுத்தினார்.
அத்துடன், வெள்ளத் தடுப்பு உள்கட்டமைப்புகளின் நிர்வாகம், பராமரிப்பு, கண்காணிப்பு முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, DBKL, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது கோலாலம்பூரில் மொத்தம் 28 வெள்ள நீர்த்தேக்கக் குளங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 13 குளங்கள் DBKL-இன் நிர்வாகத்திலும், 15 குளங்கள் கோலாலம்பூர் JPS-இன் பராமரிப்பிலும் உள்ளன.
இந்த நீர்த்தேக்கக் குளங்களின் கொள்ளளவு எப்போதும் உச்ச நிலையில் இருப்பதை உறுதி செய்ய, பராமரிப்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தலைநகரில் வெள்ள அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று ஹன்னா யோ நம்பிக்கை தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 10:34 pm
ஹங் துவா எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
July 1, 2026, 10:31 pm
எச்ஆர்டி கோர்ப்பின் 6 உயர் அதிகாரிகள் மீதான விசாரணை தொடர்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
July 1, 2026, 2:55 pm
