நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகப் போட்டித்திறன் தரவரிசையில் மலேசியா: அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்புக்குப் பிரதமர் அன்வார் பாராட்டு

அலோர் காஜா: 

உலகளாவிய போட்டித்திறன் அரங்கில் மலேசியா மீண்டும் தனது திறனை நிரூபித்துள்ள நிலையில், நாட்டின் இந்த அபார முன்னேற்றத்திற்குக் காரணமான அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, திறமையைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) வெளியிட்டுள்ள 2026 உலகப் போட்டித்திறன் தரவரிசையில், மலேசியா கடந்த ஆண்டின் 23-ஆவது இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தச் சாதனை, சமீபத்தில் துர்க்மெனிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி செர்தார் பெர்டிமுகமெடோவின் பாராட்டையும் பெற்றதாக அன்வார் தெரிவித்தார்.

தெற்கு மண்டல அரசு ஊழியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர், “மலேசியாவின் இந்த முன்னேற்றம் ஒரே நபரின் சாதனை அல்ல. திறமையான நிர்வாக அமைப்பும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு ஊழியர்களின் கூட்டு முயற்சியுமே இந்த வெற்றியின் அடித்தளம்,” என்று வலியுறுத்தினார்.

மேலும், மலேசியாவின் நிர்வாக திறன், பொதுச் சேவை செயல்திறன் துர்க்மெனிஸ்தானின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்நாடு தனது அரசு ஊழியர்களைக் மலேசியாவிற்கு அனுப்பி, இங்குள்ள பொதுச் சேவை நிர்வாக முறைகளைப் பற்றி கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

“இது வெறும் பாராட்டல்ல; உலக அரங்கில் மலேசியாவின் நிர்வாகத் திறனுக்குக் கிடைத்துள்ள உயரிய அங்கீகாரம். வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், நாம் சரியான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான தெளிவான சான்று இதுவாகும்,” என்று அன்வார் தெரிவித்தார்.

மலேசியாவின் இந்தத் தரவரிசை உயர்வு, நாட்டின் பொதுச் சேவைத் துறையின் செயல்திறன், நிர்வாகத் திறன், வளர்ச்சியை நோக்கிய அர்ப்பணிப்பு உலகளவில் அங்கீகரிக்கப்படத் தொடங்கியுள்ளதைக் காட்டும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset