நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பெர்கேசோவின் பெரும்பாலான உதவித்தொகை கோரிக்கைகள், முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படுகிறது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது இசம் முகமது இசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

கடந்த ஆண்டு பெர்கேசோ தனது வாடிக்கையாளர் சாசன இலக்குகளை கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளிலும் பூர்த்தி செய்துள்ளது.

லிண்டுங் பெகெர்ஜா, லிண்டுங் கெண்டிரி, லிண்டுங் காசிஹ் ஆகிய திட்டங்களின் கீழ் பெர்கெசோ சராசரியாக 96.86 சதவீத செயல்பாட்டுத் திறனைப் பதிவு செய்துள்ளது.

லிண்டுங் கெர்ஜாயா  அல்லது வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்தில் 99.68 சதவீத திறனைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டின் புதிய விதிகளின்படி, பெர்கெசோ உதவித்தொகை கோரிக்கைகளை விரைவாக முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறுதிச் சடங்கு, தற்காலிக உடல்நலக் குறைபாட்டிற்கான உதவிகள் இரண்டு நாட்களுக்குள்ளும்; நிரந்தர பாதிப்பு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான உதவித்தொகைகள் மூன்று நாட்களுக்குள்ளும் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் விளக்கினார்.

2025-ஆம் ஆண்டில் மட்டும் ‘லிண்டுங் பெகெர்ஜா’ திட்டத்தின் கீழ் 6.057 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 161,393 கோரிக்கைகளும், ‘லிண்டுங் கெர்ஜாயா’ திட்டத்தின் கீழ் 484.45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 274,472 கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளன.

போலியான கோரிக்கைகளைத் தடுப்பது குறித்த துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரமணன்,

பெர்கெசோவில் பல அடுக்கு சரிபார்ப்பு முறைகள் உள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு, கையேடு மதிப்பாய்வு ஆகியவற்றின் மூலம் முறைகேடுகள் தடுக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுவதை உறுதி செய்யும் சிறப்புப் பிரிவு செயல்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset