செய்திகள் மலேசியா
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
கோலாலம்பூர்:
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தும் அபாயம் உருவாகியிருந்தாலும், புதிய பந்தாய் விரைவுச்சாலை (NPE 2) நீட்டிப்பு திட்டத்தின் கட்டுமானச் செலவுகளை நிர்வகிக்கும் திறன் இன்னும் நிறுவனத்திடம் உள்ளது என IJM கார்ப்பரேஷன் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
IJM-இன் டோல் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி சுவா லே ஹூன், திட்டம் தற்போது ஒதுக்கப்பட்ட நிதி வரம்பிற்குள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உடனடி செலவுப் பரிசீலனை அல்லது மாற்றம் தேவையில்லை என்றும் கூறினார்.
அவரின் கூற்றுப்படி, திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. உண்மையான கட்டுமானப் பணிகள் முழுமையாக தொடங்கும் நேரத்தில் சந்தை விலைகள் நிலைபெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, NPE 2 திட்டத்தின் கட்டுமானச் செலவு சுமார் 1.4 பில்லியன் ரிங்கிட் ஆகும். நிலம் கையகப்படுத்தும் செலவுகள் உள்ளிட்ட மொத்த திட்ட மதிப்பு 1.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இத்திட்டம், 2029 அக்டோபரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பந்தாய் டாலம் டோல் பிளாசாவை ஜாலான் இஸ்தானா சந்திப்புடன் ஜாலான் சையித் புத்ரா வழியாக இணைக்கும் முக்கிய மாற்றுப் பாதையாக அமையும்.
திட்டம் நிறைவடைந்த பின்னர், ஜாலான் பங்சார் வழியாகச் செல்லும் போக்குவரத்தில் சுமார் 40 சதவீதத்தை மாற்றுத் திசைக்குத் திருப்பும் திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம், கோலாலம்பூரின் தெற்கு நுழைவுப் பாதைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்ட அமலாக்கத்தின் போது சாலைப் பயனாளர்கள், சுற்றுவட்டார மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக, தற்போதைய சாலைப் பாதை திறன் பராமரிப்பு, பாதுகாப்பான பணிப்பகுதிகள் அமைத்தல், தூசி, சத்தம், அதிர்வு கட்டுப்பாடு, மண் அரிப்பு, வண்டல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், தடையில்லா பலகை இல்லா மின்னணு கட்டண வசூல் முறை (MLFF) அமல்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு NPE 2 வடிவமைக்கப்பட்டிருப்பது, மலேசியாவின் நவீன நெடுஞ்சாலை கட்டமைப்பை நோக்கிய மற்றொரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 6:46 pm
ஜொகூர் தேர்தலில் மஇகா 4 தொகுதிகளில் போட்டி: ரவீன்குமார் கெமெலே தொகுதியில் களமிறங்குகிறார்
June 24, 2026, 3:31 pm
பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
June 24, 2026, 3:16 pm
LRT3 ஜூன் 29 முதல் இயங்கத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
June 24, 2026, 3:15 pm
உயர் கல்வி மாணவி கொலைக்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்: போலிஸ்
June 24, 2026, 3:14 pm
