நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நடுநிலைக் கொள்கையால் உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்வு: மலேசியா உலக அரங்கில் வலுவான தடம் பதிக்கிறது

பத்து காவான்: 

உலகின் முக்கிய வல்லரசுகளுடன் சமநிலையான உறவைத் தொடர்ந்து பேணும் மலேசியா, சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தனது நடுநிலை, சுயாதீன வெளியுறவுக் கொள்கையை உறுதியாக முன்னெடுத்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் சக்தி மிக்க நாடுகளுடன் மலேசியா சீரான உறவைப் பேணிவருவதாகக் குறிப்பிட்ட அவர், எந்த வல்லரசின் செல்வாக்குக்கும் உட்படாமல், தேசிய இறையாண்மை, சுயாதீனத்தை பாதுகாத்தபடி அனைத்துலக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே நாட்டின் நிலைப்பாடு என்றார்.

இந்த அணுகுமுறை, உலக அரங்கில் மலேசியாவின் மூலோபாய முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் உயர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வெளியுறவுக் கொள்கையின் பலனாக, துர்க்மெனிஸ்தானில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளங்களில் ஒன்றாகக் கருதப்படும் இரண்டு முக்கிய எரிவாயுத் தளங்களை நிர்வகிக்கும் வாய்ப்பை பெட்ரோனாஸ் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஒழுக்கம், அர்ப்பணிப்பு, நேர்மறையான வளர்ச்சி நோக்கத்துடன் செயல்பட்டால், மலேசியாவுக்கு உலகளவில் அளவற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன,” என்று அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, நாட்டின் போட்டித்திறனை உயர்த்த சர்வதேச நிறுவனங்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், செயற்கை நுண்ணறிவு (AI), செமிகண்டக்டர் போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் முன்னேற தேவையற்ற அதிகாரத் தாமதங்கள் குறைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இன்று நடைபெற்ற MKS சூப்பர் சென்டர் தொழிற்சாலை திறப்பு விழாவில் உரையாற்றியபோது பிரதமர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset