நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரே நொடியில் சிதறிய குடும்பங்கள்: மூன்று வாகன விபத்தில் மருத்துவர், 2 வயது மகள், LHDN அதிகாரி பலி

பெக்கான்: 

பஹாங்கின் சினி அருகே குவாந்தான்–செகாமாட் சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் மருத்துவர் ஒருவர், அவரது இரண்டு வயது மகள், உள்நாட்டு வருமான வாரியத்தின் (LHDN) மூத்த அதிகாரி உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், செகாமாட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியான டாக்டர் முஹம்மத் ஸெக்ரி சுஹைரி முஹம்மத் அடான் (33), அவரது மகள் தியா சோபியா (2), சைபர்ஜெயா LHDN கிளையின் தலைமை உதவி இயக்குநர் அஸ்ஹாருடின் முஹம்மத் அலி (46) ஆகியோர் உயிரிழந்தனர்.

போலிஸ் விசாரணையின்படி, செகாமாட்டிலிருந்து குவாந்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கார், MPV மீது, எதிர்திசையில் வந்த பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக நம்பப்படுகிறது.

ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்பாதைக்குள் புகுந்து, கார், MPV மீது நேருக்கு நேர் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில், கார், MPV வாகனங்களின் ஓட்டுனர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டு வயது சிறுமி தியா சோபியா, சினி சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், டாக்டர் ஸெக்ரியின் மனைவியும் செகாமாட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியுமான டாக்டர் ஹனா இப்ராஹிம் (35), அவரது பெற்றோர், அஸ்ஹாருடினின் மனைவி, மகன் ஆகியோர் காயமடைந்து பெக்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விபத்து தொடர்பான விசாரணை, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset