நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகாதாரக் கொள்கையில் பெரும் மாற்றம் அவசியம்: அஹ்மத் ஜாஹித்

புத்ராஜெயா: 

மலேசியாவின் சுகாதார அணுகுமுறை இனி ‘நோய் ஏற்பட்ட பின் சிகிச்சை’ என்ற பழைய மனப்போக்கிலிருந்து விலகி, ‘நோய் வரும்முன் தடுப்பு’ என்ற புதிய சுகாதாரக் கலாசாரத்தை நோக்கி நகர வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் (NCD) பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தடுப்பு மருத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் மத்தியில் பரவலாக ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயம் என்றார்.

அண்மைய தேசிய சுகாதார, நோய்த்தாக்க மதிப்பாய்வு (NHMS) 2023 அறிக்கையின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 54.4 சதவீதம் பேர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை, நாட்டின் உணவுக் கொள்கை, ஊட்டச்சத்து சூழலில் விரிவான சீர்திருத்தங்கள் தேவைப்படுவதை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டின் வயது வந்த மக்களில் 29.2 சதவீதம் பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 33.3 சதவீதம் பேர் அதிக கொலஸ்ட்ரால் அளவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 15.6 சதவீதம் பேர் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்நோய்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், தேசிய சுகாதார அமைப்பின் சுமையையும் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்த அவர், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அரசாங்க முயற்சிகளுக்குத் துணையாக தனியார் சுகாதாரத் துறையும் தீவிர பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

டாக்டர் சுஃபியான் பாலிகிளினிக் நலவாழ்வு மையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset