நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்ச்சாமை புரட்டிப்போட்ட புயல்: 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

ஈப்போ: 

பெர்ச்சாம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை நேற்று மாலை தாக்கிய கடுமையான புயல், கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அஞ்சுங் பெர்ச்சாமைச் சுற்றியுள்ள ஏழு குடியிருப்புப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புயலின் போது வீசிய சூறாவளிக் காற்று பல வீடுகளின் கூரைகளைத் தூக்கி வீசியதுடன், சில கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்தன. சம்பவம் தொடர்பான காணொலிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மலேசிய பாதுகாப்புப் படை (APM) வெளியிட்ட தகவலின்படி, டத்தாரான் தாசேக் தீமூர் 6 பகுதியில் மட்டும் 177 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல குடியிருப்புப் பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து, ஈப்போ மாநகராட்சி (MBI) உடனடியாக மீட்பு, சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. சாலைகளை மறித்தும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தும் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டன.

புயலின் தாக்கத்தால் பல மின்கம்பங்களும் சாய்ந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக கம்போங் தஞ்சோங் சிம்பாங் புலாய் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 60 வீடுகள் பாதிக்கப்பட்டன. எனினும், நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசரகாலத் தேவைக்காக டத்தோ அஹ்மத் சயீத் மண்டபம் தற்காலிக நிவாரண மையமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்த நிவாரண மையமும் திறக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset