நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குரூன் முகாம் வெடிப்பு சம்பவம்: கையெறி குண்டு பயிற்சிகள் நிறுத்தப்படுகிறது

கோலாலம்பூர்: 

கெடா மாநிலத்தின் குரூனில் அமைந்துள்ள கேம் ஹோபார்ட் இராணுவ முகாமில் நிகழ்ந்த துயரகரமான வெடிப்பு சம்பவத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மலேசிய தரைப்படை (TDM) கையெறி குண்டு வீச்சுப் பயிற்சிகளை நாடு முழுவதும் உடனடியாக நிறுத்தியுள்ளது.

மலேசிய தரைப்படைத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ அஸ்ஹான் மட் ஒஸ்மான், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், தரைப்படையின் அனைத்து பிரிவுகளிலும் இந்தப் பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 வெடிபொருள், குண்டு நிபுணத்துவப் பிரிவினரையும் உள்ளடக்கிய சிறப்பு விசாரணைக் குழு சம்பவத்தின் காரணங்களை ஆராயவுள்ளது. இந்த விசாரணை இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

“விசாரணை முடிவுகள் கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும். தரைப்படை, மலேசிய ஆயுதப் படையினரின் பாதுகாப்பே எங்களின் முதன்மை கவனமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை வெடிப்பிற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், விசாரணைக் குழு தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தத் துயர சம்பவத்தில், 6ஆம் ராயல் மலாய் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த கோப்ரல் நோராஸ்மி அபு பக்கார், 1ஆம் ராயல் இன்ஜினியர்ஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த சித்தி காதிஜா சுங்கிப் ஆகியோர் உயிரிழந்தனர்.

கடுமையாகக் காயமடைந்த இருவரும் சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தரைப்படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset