நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டச் சிக்கலில் சிக்கிய வேப் தொழில்: பிரதமரின் தலையீட்டை கோரும் தொழில்துறை

கோலாலம்பூர்: 

நிகோடின் விலக்கு தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள சட்ட, நிர்வாக குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என வேப் (Vape) தொழில்துறையைச் சேர்ந்த ஐந்து முக்கிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

தொழில்துறை பிரதிநிதிகள் சமர்ப்பித்துள்ள நினைவுக் குறிப்பில், பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடிப்பு பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (Act 852), விஷச் சட்டம் 1952 (Act 366) ஆகியவற்றின் அமலாக்கம் தொடர்பாக நிலவும் தெளிவின்மை, வணிக நடவடிக்கைகளையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நிகோடின் கலந்த வேப் தயாரிப்புகள், திரவங்களின் பதிவுச் செயல்முறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள், தொழில்துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 

இதனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகளின் நிலை, புதிய விண்ணப்பங்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
மலேசிய இ-வேப்பரைசர்கள், புகையிலை, பொருட்கள் சங்கத்தின் (MEVTA) தலைவர் முஹம்மத் நீசாம் தாலிப், தொழில்துறை அரசாங்கம் விதித்துள்ள அனைத்து ஒழுங்குமுறை நிபந்தனைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தார். தயாரிப்பு பதிவு, கட்டாய லேபிளிங், ஆய்வகச் சோதனைகள், தொழில்நுட்பச் சான்றிதழ்கள், கலால் வரி, அரசுக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவரின் கூற்றுப்படி, தற்போதைய நிச்சயமற்ற நிலை நீடித்தால் சட்ட உறுதித்தன்மை, நிர்வாக நம்பகத்தன்மை, அரசுக் கொள்கைகளை நம்பி முதலீடு செய்த நிறுவனங்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடும்.

வேப் தொழில்துறை வேலைவாய்ப்புகள் உருவாக்கம், உள்நாட்டு உற்பத்தி, விநியோகச் சங்கிலி வளர்ச்சி, அரசாங்க வருவாய் ஈட்டுதல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, சட்டரீதியான தொடர்பு குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்க வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட, பதிவுக்காக காத்திருக்கும் நிகோடின் வேப் தயாரிப்புகளின் நிலை குறித்த தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தொழில்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நினைவுக் குறிப்புக்கு MEVTA, MRECA, PPVM, MVIA, DPVM உள்ளிட்ட முக்கிய வேப் தொழில்துறை அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset