நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“ரோஹிங்கியா பிரச்சினை எளிதானதாயிருந்தால் 40 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ந்திருக்கும்”: திமோர்-லெஸ்டே அதிபர் ராமோஸ்-ஹோர்டா

கோலாலம்பூர்: 

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை என்பது ஒரு சாதாரண மனிதாபிமான விவகாரம் அல்ல; மாறாக, பல தசாப்தங்களாக நீடித்து வரும் மியான்மரின் சிக்கலான இன, ஆயுத மோதல்களின் பிரதிபலிப்பாகும் என்று திமோர்-லெஸ்டே அதிபர் ஜோசே ராமோஸ்-ஹோர்டா தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சினை எளிதானதாக இருந்திருந்தால், அது 40 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டிருக்கும்,” என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ‘The Rising Sun: Timor-Leste’s Journey to Peace and Development’ நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், மியான்மரில் சுமார் 18 இன அடிப்படையிலான ஆயுதக் குழுக்கள் தனித்தனியாக செயல்பட்டு வருவதால், அந்நாட்டின் நெருக்கடி உலகின் மிகவும் சிக்கலான மோதல்களில் ஒன்றாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மியான்மருக்குச் சென்றபோதும், வெளிநாடுகளில் மியான்மர் மக்களைச் சந்தித்தபோதும், பெரும்பான்மை இனத்தவரில் பலர் ரோஹிங்கியாக்களைப் பற்றி பேசவே தயங்கியதாகவும், “அவர்கள் இல்லாதவர்கள் போல நடத்தப்படுகின்றனர்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது குறித்து பேசுவதற்கு முன்பு, அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுத மோதல்களை உடனடியாக நிறுத்துவது அவசியம் என்று ராமோஸ்-ஹோர்டா வலியுறுத்தினார்.

“மியான்மருக்கு இப்போது மிகவும் தேவைப்படுவது ஜனநாயக விவாதம் அல்ல; ரத்தப்பாய்ச்சலை நிறுத்துவதே முதன்மை,” என்று அவர் கூறினார்.

அனைத்து தரப்பினரும் எந்த முன்நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தை மேசையில் அமர வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய அரசு சாரா அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள், அண்டை நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள், ரோஹிங்கியா அகதிகளின் வருகையால் சமூக, பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை தொடர்ந்தால், உள்ளூர் மக்களிடையே அதிருப்தியும் பதற்றமும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.

மியான்மர் நெருக்கடிக்கு நீடித்த தீர்வு காண, எந்தத் தரப்புக்கும் சார்பில்லாத, சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் தேவைப்படுவதாக ராமோஸ்-ஹோர்டா கருத்து தெரிவித்தார்.

“சில நேரங்களில் வெளிப்புற நடுநிலை நபர் ஒருவரின் தலையீடு, அனைத்து தரப்பினரின் கண்ணியத்தையும் பாதுகாத்தபடி சமரசத்திற்கான கதவுகளைத் திறக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

பல தசாப்தங்களாக நீடித்து வரும் ரோஹிங்கியா நெருக்கடி, வெறும் அகதிகள் பிரச்சினை அல்ல; மியான்மரின் ஆழமான அரசியல், இன மோதல்களின் வெளிப்பாடாகும் என்பதை அவரது கருத்துகள் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset