செய்திகள் மலேசியா
MyLesen B2 திட்டம்: ஜூலைக்குள் 30,000 இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் உரிமம் கிடைக்கப்பெறுகிறது
யோங் பெங்:
இளைஞர்களின் சாலைப் பாதுகாப்பையும் சட்டபூர்வ ஓட்டுநர் தகுதியையும் மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள MyLesen B2 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 30,000 இளைஞர்கள் ஜூலை மாதத்திற்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெறவுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் இணைந்த சிலர் ஏற்கனவே தங்களது உரிமங்களைப் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ளவர்களும் அடுத்த மாதத்திற்குள் முழுமையாக பயனடைவார்கள் என்று JPJ தலைமை இயக்குநர் டத்தோ அய்டி ஃபட்லி ரம்லி கூறினார்.
இந்த ஆண்டு, இளைஞர்களுக்கான உரிமம் பெறும் செலவை முழுமையாக ஏற்கும் வகையில் போக்குவரத்து அமைச்சு 10.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 30,000 இளைஞர்கள் சட்டபூர்வமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாக உருவாக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
இதனுடன், மேல்நிலைப் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்ட MyLesen B2 Sekolah (MyB2S) திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதத்திற்குள் 60,000-க்கும் அதிகமான மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், ஆண்டுதோறும் நாட்டில் பதிவாகும் 6,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு சாலை விபத்துகளில் சுமார் 65 சதவீதம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பின்னிருக்கை பயணிகளை உள்ளடக்கியவை எனக் குறிப்பிட்டார்.
மேலும், உயிரிழக்கும் பலரும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என்பதும் கவலைக்குரிய விடயமாகும் என்றார் அவர்.
“இன்றைய சூழலில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செலவு பல குடும்பங்களுக்குப் பொருளாதாரச் சுமையாக உள்ளது. அதனை உணர்ந்த அரசாங்கம், MyLesen B2, MyB2S திட்டங்கள் மூலம் முழு நிதி உதவியை வழங்குகிறது,” என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு MyLesen B2 திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 25,000 பேர் பயனடைந்த நிலையில், இந்த ஆண்டு அதிகமான இளைஞர்களைச் சென்றடையும் வகையில் திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களை சட்டபூர்வமான ஓட்டுநர்களாக உருவாக்குவதோடு, சாலை விபத்துகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக MyLesen B2 திட்டம் பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 5:07 pm
அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்ய அனுமதி கொடுப்பது ஏன்?: மிண்டாஸ் தலைவர் இராஜசேகரன் கேள்வி
June 16, 2026, 4:30 pm
தீர்ப்பாய உத்தரவை மீறுபவர்களுக்கு அமலுக்கு வரும் புதிய சட்ட நடவடிக்கை: நூருல் ஹுஸ்னா அவாங்
June 16, 2026, 4:02 pm
