நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலச் சிற்பிகள் பெண்கள்: பினாங்கு முதல்வர் சோ கோன் இயோ வலியுறுத்தல்

பினாங்கு: 

பெண்களின் அதிகாரமளித்தல் வெறும் கருத்தரங்க மேடைகளில் மட்டுமே நிற்கக் கூடாது; அது பொருளாதாரப் பங்கேற்பு, தலைமைத்துவம், முடிவெடுக்கும் அதிகாரமாக மாற வேண்டும் என பினாங்கு முதல்வர் சோ கோன் இயோ வலியுறுத்தினார்.

உலக மகளிர் பொருளாதார, வணிக உச்சிமாநாடு 2026 (WWEBS 2026) நிகழ்வில் உரையாற்றிய அவர், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் ஏற்கனவே முக்கிய பங்காற்றி வருவதாகவும், எதிர்கால பொருளாதாரத்தை வடிவமைக்கும் சக்தியாக அவர்கள் உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மலேசியாவில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தற்போது 56.5 விழுக்காடாக உயர்ந்துள்ளதுடன், நாடு முழுவதும் சுமார் 242,000 சிறு, குறுந்தொழில் நிறுவனங்களைப் பெண்கள் வழிநடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

May be an image of one or more people, dais and text

பினாங்கு 2030 வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் தொழில்முனைவோர் துறையில் பெண்களின் பங்கேற்பை 40 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதுவரை அந்த இலக்கில் 81 விழுக்காடு முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இன்னும் திருப்திகரமான நிலையில் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 13.5 விழுக்காடும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 12 விழுக்காடும் மட்டுமே பெண்கள் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், உச்சிமாநாட்டில் உரையாற்றிய கோலாலம்பூர் பொருளாதாரக் கழகத் தலைவர் KSI Strategic Institute for Asia Pacific அமைப்பின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ முஹம்மத் இக்பால், பெண்கள் இனி பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வோர் மட்டுமல்ல; மாறாக புதிய பொருளாதாரத்தின் திசையை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்த வடிவமைப்பாளர்கள் எனக் குறிப்பிட்டார்.

“பெண்களின் தலைமைத்துவம், புதுமைத்திறன், தீர்க்கதரிசன பார்வை இல்லாமல் எதிர்கால பொருளாதாரம் முழுமையடையாது,” என்று அவர் கூறினார்.

May be an image of text that says "KSI መ 에래밥 0000 MGTC 2026 WORLD WOMEN ECONOMIC & BUSINESS SUMMIT Women Shaping the Next Economy Leading Innovation, Resilience Inclusive 15th Jl 15thJ4le2026 le 2026 Shang KSI g, Malaysia STRATEGIC INSTITUTE FORASIAPACIFIC KS Economie"

மேலும், பெண்கள் தலைமையிலான நிறுவனங்களும் தொழில் நிபுணர்களும் தொழில்நுட்பம், அறிவியல், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் வணிகம், கார்ப்பரேட் தலைமைத்துவம் போன்ற துறைகளில் புதுமையை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் கொண்டுவரும் புதிய பார்வைகள் சந்தை அமைப்புகளையும் நுகர்வோர் பழக்கங்களையும் மறுபரிமாணப்படுத்துகின்றன என்றார் அவர்.

தொடர்ந்து, கோவிட்-19 பிந்தைய மீட்பு, பணவீக்க அழுத்தங்கள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலை போன்ற சவால்களைச் சமாளிப்பதில் பெண்கள் தலைமையிலான அமைப்புகள் வலுவான தகவமைப்புத் திறன், இடர் மேலாண்மை மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளன என்று டத்தோ ஸ்ரீ முஹம்மத் இக்பால் ராவ்தர் பாராட்டினார்.

ஆசிய-பசிபிக் நாடுகள் பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கு நிதி, திறன் மேம்பாடு, டிஜிட்டல் அணுகல், சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இளம் பெண்கள் தொழில்முனைவோர், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் முன்னேற வழிகாட்டுதல், முதலீடு, சர்வதேச வலைப்பின்னல்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, உச்சிமாநாட்டில் தொழில்நுட்பம், அறிவியல், கல்வி, வணிகத் துறைகளில் சிறந்து விளங்கிய பல பெண் தலைவர்களுக்குச் சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன.

பெண்களின் அதிகாரமளித்தல் என்பது சமூக நீதிக்கான முயற்சி மட்டுமல்ல; உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தி என்பதையே இந்த மாநாடு மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset