செய்திகள் மலேசியா
தீர்ப்பாய உத்தரவை மீறுபவர்களுக்கு அமலுக்கு வரும் புதிய சட்ட நடவடிக்கை: நூருல் ஹுஸ்னா அவாங்
கோலாலம்பூர்:
பள்ளி, பணியிடம், இணையவழி கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கொடுமை எதிர்ப்பு சட்டத்தின் கீழ், கொடுமை எதிர்ப்பு தீர்ப்பாயத்தின் (Anti-Bullying Tribunal) உத்தரவுகளைப் புறக்கணிப்போர் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
தீர்ப்பாயத் தலைவர் நூருல் ஹுஸ்னா அவாங், தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்புகள் இறுதியானதும் கட்டாய அமலாக்கத்திற்குரியதுமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்ட இழப்பீடு அல்லது பிற நிவாரணங்களைக் குற்றவாளிகள் நிறைவேற்றத் தவறினால், அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அவரின் கூற்றுப்படி, தீர்ப்பாயத் தீர்ப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் அது சிவில் நீதிமன்றத் தீர்ப்பாக கருதப்படும். அதன் பின்னரும் உத்தரவுக்கு இணங்க மறுப்பவர்கள் மீது சட்டத்தின் பிரிவு 44-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இந்தச் சட்டத்தின் படி, தீர்ப்பாய உத்தரவை 30 நாட்களுக்குள் நிறைவேற்றத் தவறுபவர்களுக்கு அபராதம், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தால், அபராதத் தொகை வழங்கப்பட்ட இழப்பீட்டின் இருமடங்கு வரை உயரக்கூடும்.
மேலும், குற்றவாளி உத்தரவை மீறியதாக பாதிக்கப்பட்டவர் அல்லது புகார்தாரர் போலிஸ் புகார் அளிக்க வேண்டும். அதன் பின்னர், சட்ட நடவடிக்கைகள் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளின் மூலம் முன்னெடுக்கப்படும்.
மேலும், 250,000 ரிங்கிட் வரை மதிப்புள்ள தீர்ப்பாய உத்தரவுகள் அமலாக்கத்திற்காக செஷன்ஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்றார் அவர்.
அடையாளம் தெரியாத சமூக ஊடகக் கணக்குகள் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் இணையக் கொடுமையாளர்கள் தொடர்பான வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் (MCMC) உதவி பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்தின் இந்தக் கடுமையான அம்சங்கள், பகடிவத்தை செயல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை மணியாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் முக்கிய பாதுகாப்புக் கவசமாகவும் பார்க்கப்படுகின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 5:07 pm
அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்ய அனுமதி கொடுப்பது ஏன்?: மிண்டாஸ் தலைவர் இராஜசேகரன் கேள்வி
June 16, 2026, 4:02 pm
