செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: இருமுறை பின்தங்கியும் வீழாத ஈரான், நியூசிலாந்துடன் 2-2 என பரபரப்பு சமநிலை
லாஸ் ஏஞ்சல்ஸ்:
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விறுவிறுப்பும் போராட்ட உணர்வும் நிறைந்த ஆட்டத்தில், ஈரான் அணி இருமுறை பின்தங்கிய நிலையிலிருந்து அபாரமாக மீண்டு, நியூசிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையைப் பதிவு செய்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான மோதலில், நியூசிலாந்தின் நட்சத்திரத் தாக்குதல் வீரர் எலிஜா ஜஸ்ட் இரண்டு கோல்களைப் பதிவு செய்து அணியை இருமுறை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே கிறிஸ் வுட்டின் துல்லியமான பாஸைக் கோலாக மாற்றிய எலிஜா ஜஸ்ட், நியூசிலாந்துக்கு ஆரம்ப முன்னிலை பெற்றுத் தந்தார்.
பின்னர், 32-ஆவது நிமிடத்தில் ராமின் ரெசாயியான் அடித்த கோல் மூலம் ஈரான் சமநிலையை எட்டியது. அதற்கு முன்பு மெஹ்தி தரேமியின் நீண்ட தூர ஷாட் கோல் கம்பில் பட்டு வாய்ப்பைத் தவறவிட்டது.
இரண்டாம் பாதியில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்திய நியூசிலாந்து, 55-ஆவது நிமிடத்தில் எலிஜா ஜஸ்டின் இரண்டாவது கோலின் மூலம் 2-1 என முன்னிலை பெற்றது.
எனினும், போராட்ட குணத்தை வெளிப்படுத்திய ஈரான், ஒன்பது நிமிடங்களுக்குப் பின்னர் முஹம்மத் மொஹேபியின் தலையால் அடிக்கப்பட்ட கோல் மூலம் மீண்டும் ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தது.
இறுதி நேரங்களில் ஈரான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதிலும், நியூசிலாந்தின் கட்டுக்கோப்பான தற்காப்பு ஆட்டம், ஈரான் வீரர்களின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியமை காரணமாக போட்டி 2-2 என்ற சமநிலையில் முடிவடைந்தது.
இந்த முடிவு, உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் ஈரானின் கனவுக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, குழு G-யில் உள்ள மற்ற அணிகளான எகிப்தும் பெல்ஜியமும் சமநிலையைப் பதிவு செய்ததால், அடுத்த கட்டப் போட்டிகள் மேலும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 9:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சவூதி அரேபியாவிடம் தப்பியது உருகுவே
June 16, 2026, 7:47 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - எகிப்து சமநிலை
June 16, 2026, 7:46 am
உலகக் கிண்ண போட்டியில் முதல் அதிர்ச்சி: ஸ்பெயினை அலறவிட்டது கேப் வெர்டே
June 15, 2026, 4:24 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: அபாரமாக ஆடி துனிசியாவை சுவீடன் வென்றது
June 15, 2026, 12:58 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்திய ஸ்வீடன்
June 15, 2026, 12:20 pm
ஏலத்திற்கு வரும் உலகக் கிண்ணப் போட்டி நினைவுப் பொருள்கள்
June 15, 2026, 9:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நெதர்லாந்து - ஜப்பான் சமநிலை
June 15, 2026, 9:25 am
