நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட கால்பந்து போட்டி; பள்ளிகளின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

பேரா மாநில அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பள்ளிகளின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை வலியுறுத்தினார்.


இப்போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் இந்த ஆண்டு 20 விழுக்காட்டிற்கும் குறைவான பள்ளிகள் மட்டுமே பங்கேற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

இதுகுறித்து மாநில கல்வித் துறை இயக்குநருடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும்.

இன்று ஈப்போவில் உள்ள ஈப்போ பாடாங்கில் 18ஆவது ஆண்டாக மாநில அளவிலான போட்டியை தொடக்கி  வைத்தப் பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.


மாநிலத்தில் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ள நிலையில், இந்த ஆண்டு 28 அணிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்றுள்ளதாக கூறினார்.

2023ஆம் ஆண்டு மாநில அரசு இந்தப் போட்டிக்கு நேரடியாக ஆதரவு வழங்கத் தொடங்கியது.

அப்போது 42 அணிகள் பங்கேற்றன. 2024ஆம் ஆண்டு 51 அணிகளும், 2025ஆம் ஆண்டு 61 அணிகளும் பங்கேற்றன.

ஆனால் இந்த ஆண்டு பங்கேற்பு கடுமையாகக் குறைந்துள்ளது. என்றார்.

பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் இடங்களில் இரண்டு பள்ளிகள் இணைந்து ஒரு அணியாக பங்கேற்பது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், இந்த ஆண்டின் பங்கேற்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

இதற்காக மாநில அரசு 2023ஆம் ஆண்டு 30,000 ரிங்கிட் 2024ஆம் ஆண்டு 38,000 ரிங்கிட், 2025ஆம் ஆண்டு 50,000 ரிங்கிட் மற்றும் இந்த ஆண்டும் 30,000 ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது மாணவர்களுக்கு தேசிய அளவில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் முக்கியமான போட்டி.

எதிர்காலத்தில் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் விளையாடக்கூடிய வீரர்களை உருவாக்கும் தளமாக இது அமையக்கூடும்.

ஆனால் பல பள்ளிகள் அதனை முக்கியமாகக் கருதாதது வருத்தமளிக்கிறது என்றார்.

இந்தப் போட்டி பேரா  மாநில கால்பந்து சங்கத்தினால் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இப்போட்டி நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் பேரா இந்தியர் கால்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset