நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FIFA WC 2026: தென் கொரியாவின் அசத்தல் வெற்றி

குவாதலஜரா:

மெக்சிகோவின் குவாதலஜராவில் நடைபெற்ற 2026 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மற்றொரு ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா அணி, செக்கியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நீண்ட காலத்துக்கு பிறகு உலகக் கோப்பையில் முதல் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்தது. அதன் மூலம் அவ்வணி 3 புள்ளிகளைப் பெற்றது.

2006-க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் செக் குடியரசு அணியினர் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கத் திணறினர். 

அதேவேளையில், கொரிய அணியினர் முதல் பாதியின் இறுதியில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளைப் பெற்றனர்.

ஃபிபா தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள கொரியர்கள், 38-வது இடத்தில் உள்ள செக் அணியினருக்கு எதிராக கோல் அடிப்பதற்கான மிக முக்கியமான வாய்ப்புகள் பலவற்றைப் பெற்றிருந்தும், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.

ஆட்டத்தின் 60-வது நிமிடத்தின் போது கோலை நோக்கிய ஷாட் முயற்சியை தென் கொரியா 12 முறை மேற்கொண்டது. இதில் இலக்கை நோக்கி 4 முறை அடித்தும் கோல் போட முடியாமல் பின் தங்கியிருந்தது. 

மாறாக செக் குடியரசு அணி 3 ஷாட்களை கோல் நோக்கி அடித்ததில் 1 ஷாட் இலக்கை நோக்கிச் சரியாகச் சென்றதில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இடைவேளைக்குப் பிறகு 59-வது நிமிடத்தில் செக் வீரர் விளாதிமீர் கவ்ஃபால் வலது புறத்திலிருந்து த்ரோ இன் செய்தார். அது மிக மிக நீண்ட த்ரோ, அது கொரிய கோல் வலை வரை பறந்து சென்றது. அங்கு செக் வீரர் கிரேய்ச்சீ ‘மார்க்’ செய்யப்படாமல் தனித்து இருந்தார். காற்றில் வந்த பந்தை எம்பி தலையால் முட்டி கொரிய கோலுக்குள் செலுத்தினார். செக்கியா அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

ஆனால் இந்த முன்னிலை 8 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. இத்தனைக்கும் ஒரு கோல் அடித்த பிறகே 9 வீரர்களையும் தடுப்பு உத்தியில் இறக்கியது செக்கியா அணி. அதையும் மீறி தென் கொரியா அட்டகாசமாக கோல் அடித்து சமன் செய்தது. 

காரணம் தடுப்பு உத்தியில் கவனம் செலுத்தியதாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பந்தை கொரிய வீரரிடம் இழந்ததாலும் லீ கீ ஹியூக் நடுக்களத்திலிருந்து மிக அருமையான பாஸ் ஒன்றை லீ காங்கிடம் அளித்தார். இவர் ஒரு அருமையான டச் மூலம் பெனால்டி பகுதிக்குள் பந்தை தள்ள அங்கு ஹவாங் இன் பியூம் என்ற தென் கொரிய வீரர், இரண்டு செக் வீரர்களை அட்டகாசமாக ஏமாற்றி போக்குக் காட்டி கோலுக்குள் திணித்தார். கொரியா சமன் செய்தது.

ஆனால், அடுத்த 3 நிமிடங்களிலேயே செக்கியா அணி வீரர் ஹிலோசெக் என்பவரை லீ ஹான் பியும் கீழே தள்ள டி சர்க்கிளுக்கு சற்று வெளியே ஃபவுல் ஆக ஃப்ரீ-கிக் செக்கியா அணிக்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஃப்ரீ-கிக்கை கவ்ஃபால் அடிக்குமாறு போக்குக் காட்ட சாடிலெக் என்ற வீரர்தான் பந்தை உண்மையில் எடுத்தார்.

இவர் மிக அருமையாக கோலுக்கு அருகில் கொடுக்க 6 அடி தூரத்திலிருந்து சவ்செக் பந்தைத் தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். கொண்டாட்டங்கள் பீறிட்டு எழுந்தது இருந்த இடம் தெரியாமல் அமுங்கிப் போனது காரணம், அதனை ஆஃப் சைடு என்று தீர்ப்பளித்து நடுவர் கோலை மறுத்தார். ஸ்கோர் 1-1 என்றே நீடித்தது. 

இதே ஹவாங் தான் 80-வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து ஷாட் ஒன்றை பாஸ் செய்ய அங்கு மற்றொரு கொரிய வீரர் ஓ ஹியூன் கியூ 2-வது கோலை அடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது.

அதன் பிறகு 2 நெருக்கமான கோல் வாய்ப்புகள் செக்கியா அணிக்குக் கிடைத்தது. ஆனால் இருமுறையும் தென் கொரிய கோல் கீப்பர் அட்டகாசமாகத் தடுத்தார். இதனால் கடைசி வரை சமன் செய்ய முடியவில்லை. செக் குடியரசு தோல்வி கண்டது. மறுக்கப்பட்ட கோல் அவர்களுக்குத் தீரா காயமாகவே இருக்கும்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset