நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஃபிஃபா  உலகக்கோப்பை 2026: ஆட்டத்தின் முகத்தையே மாற்ற அமல்படுத்தப்பட்ட புதிய விதிகள் 

 லாஸ் ஏஞ்சல்ஸ்: 

ஃபிஃபா உலகக்கோப்பை 2026 போட்டியை முன்னிட்டு, கால்பந்து உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய விதிமுறைகளை ஃபிஃபா அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஆட்ட நேர விரயத்தைக் கட்டுப்படுத்துதல், பாகுபாட்டை ஒழித்தல், வீடியோ உதவி நடுவர்களின் (VAR) பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்த மாற்றங்கள் கவனம் செலுத்துகின்றன.

“இந்த விதித் திருத்தங்கள், ஆட்டத்தின் வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வீரர்கள், ரசிகர்களின் அனுபவத்தையும் மேம்படுத்தும்,” என ஃபிஃபா தெரிவித்துள்ளது.

கோல் உதைப்பை அல்லது பக்கவாட்டு எறிதலை (Throw-in) வீரர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக நடுவர் கருதினால், அவர் கைசைகை மூலம் ஐந்து விநாடிகள் கவுண்ட்டவுன் தொடங்குவார்.

அந்த நேரத்திற்குள் பந்து விளையாடப்படாவிட்டால், எதிரணிக்கு நேரடியாக மூலை உதைப்பு (Corner Kick) வழங்கப்படும்.

மேலும், மாற்றப்படும் வீரர் 10 விநாடிகளுக்குள் ஆடுகளத்தை விட்டு வெளியேற வேண்டும். விதியை மீறினால், மாற்று வீரர் உடனடியாக களமிறங்க முடியாது. அடுத்த ஆட்ட நிறுத்தம் வரை அவர் காத்திருக்க வேண்டியிருக்கும்.
இதே விதி காயமடைந்து மைதானத்திலேயே சிகிச்சை பெறும் வீரர்களுக்கும் பொருந்தும். அவர்கள் வெளியேறிய பின்னர், ஆட்டம் மீண்டும் தொடங்கி குறைந்தது ஒரு நிமிடத்திற்குப் பிறகே களத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து, எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது, வீரர்கள் தங்கள் வாயை மூடி பேசுவது இனி கடுமையாகக் கண்காணிக்கப்படும்.

வேண்டுமென்றே வாயை மறைத்து உரையாடுவதாக நடுவர் கருதினால், அந்த வீரருக்கு நேரடியாக சிவப்பு அட்டை வழங்கப்படலாம்.

இந்த மாற்றம், ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர், பென்ஃபிகா வீரர் கியான்லூகா பிரெஸ்டியானி தொடர்பான சர்ச்சைக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, VAR தற்போது தவறாக வழங்கப்பட்ட இரண்டாவது மஞ்சள் அட்டை, தவறான அடையாளத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, தவறாக வழங்கப்பட்ட மூலை உதைப்பு, கோல், பெனால்டி அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய கடுமையான தவறுகள் போன்ற சூழ்நிலைகளையும் ஆய்வு செய்ய முடியும்.

நடுவரின் தீர்ப்பை எதிர்த்து வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு சிவப்பு அட்டை வழங்கப்படும்.

அதேபோல், அந்த நடவடிக்கையை ஊக்குவிக்கும் அணி அதிகாரிகளும் சிவப்பு அட்டைக்கு ஆளாகலாம்.

இந்த விதி, கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆப்பிரிக்க நாடுகள் கோப்பை இறுதிப் போட்டியில், பெனால்டி தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து செனகல் அணி மைதானத்தை விட்டு வெளியேறிய சர்ச்சையைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவாகக் கருதப்படும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026-இல், இந்த புதிய விதிமுறைகள் ஆட்டத்தின் வேகம், ஒழுக்கம், நியாயத்தன்மையைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset