செய்திகள் மலேசியா
முன்னாள் இராணுவ வீரர்கள் வார்டன்களாக நியமனம்: MRSM-இல் பகடிவதை வழக்குகள் அதிரடியாக சரிவு
கோலாலம்பூர்:
முன்னர் பகடிவதை சம்பவங்களால் கவலைக்குரிய பதிவுகளைக் கொண்டிருந்த சில Maktab Rendah Sains MARA (MRSM) கல்வி நிலையங்களில், தற்போது பகடிவதை வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (UPM) மேற்கொண்ட ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
MRSM விடுதிகளில் முன்னாள் இராணுவ வீரர்களை முழுநேர வார்டன்களாக நியமித்த MARA-வின் அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக இந்த ஆய்வு உறுதிப்படுத்தியதாக MARA தலைவர் டத்தோ டாக்டர் அஸ்யரஃப் வாஜ்டி துசுகி தெரிவித்தார்.
சுயாதீன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மாணவர்களின் ஒழுக்கம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருப்பதுடன், முன்னர் வார்டன் பொறுப்புகளையும் ஏற்று வந்த ஆசிரியர்களின் பணிச்சுமையும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்யரஃப் தனது பேஸ்புக் பதிவில், ‘Teach You A Lesson’ என்ற நாடகத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்ததாகவும், அதில் வரும் முன்னாள் கமாண்டோ அதிகாரி கதாபாத்திரத்திற்கும் MRSM-இல் பணியாற்றும் முன்னாள் இராணுவ வார்டன்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“பள்ளிகளில் பகடிவதை கலாசாரத்தை ஒழிப்பதே இருவரின் முக்கிய நோக்கமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
பகடிவதை என்பது மிகவும் தீவிரமான சமூகப் பிரச்சினை என்றும், கல்வி நிலையத்தின் நற்பெயர் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் எந்தவொரு மிரட்டல் சம்பவத்தையும் மறைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“செல்வாக்கு மிக்கவர்களின் பிள்ளைகள் என்ற காரணத்தால் கூட எந்தவித பாரபட்சமும் காட்டப்படக்கூடாது. பகடிவதை விவகாரங்களில் சமரசத்திற்கு இடமில்லை,” என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு MARA தலைவராக பொறுப்பேற்றபோது, அரசியல் செல்வாக்கு கொண்ட ஒருவரின் மகனைச் சார்ந்த பகடிவதை வழக்கை கையாண்ட அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அந்த வழக்கில், சம்பந்தப்பட்ட மாணவரின் தந்தை செல்வாக்கு மிக்கவர் என்பதால் நடவடிக்கை எடுக்க MRSM நிர்வாகம் தயக்கம் காட்டியதாக அவர் கூறினார்.
எனினும், சமூக ஊடகங்கள் வாயிலாக பெற்றோரிடமிருந்து தகவல் கிடைத்தவுடன், MARA, MRSM நிர்வாகத்திடம் நேரடியாகத் தொடர்புகொண்டு எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு எந்தவித மேல்முறையீட்டு சந்திப்புகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
“பகடிவதை வழக்குகள் எதுவும் மறைக்கப்பட்டாலோ அல்லது சமரசம் செய்யப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தின் முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என அஸ்யரஃப் கடுமையாக எச்சரித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 10:18 pm
நம்பிக்கை கூட்டணியில் பெர்சத்து இணைவது குறித்து எந்தப் பேச்சும் இல்லை: டத்தோஸ்ரீ அன்வார்
June 10, 2026, 10:18 pm
பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை
June 10, 2026, 10:16 pm
சிகாம்புட் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கமம்: ஜூன் 14இல் பள்ளி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம்
June 10, 2026, 6:14 pm
