நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MACC அதிகாரிகளுக்கு ஒரு மாதத்திற்குள் சொத்து அறிவிப்பு கட்டாயமாக்கப்படுகிறது: புதிய தலைமை ஆணையரின் அதிரடி உத்தரவு

புத்ராஜெயா: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், அனைத்து MACC அதிகாரிகளும் பணியாளர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

MACC-யின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நேர்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக தனது தலைமையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற MACC-யின் மாதாந்திர ஒன்றுகூடலில் முதன்முறையாக உரையாற்றிய அவர், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அனைத்து அதிகாரிகளும் சொத்து அறிவிப்பை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து MACC அதிகாரிகளும் சொத்து அறிவிப்பை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். அந்த உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில், இந்த நடைமுறையை முதலில் மேற்கொள்வது நானாகவே இருப்பேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், பொதுமக்களின் கருத்து, ஊடகங்களின் அழுத்தம் அல்லது அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும், MACC எந்தவித அழுத்தத்திற்கும் தலைவணங்காது என்று அவர் உறுதியளித்தார்.

“நீதியும் சட்டத்தின் ஆட்சியும் எவ்வித சமரசமுமின்றி நிலைநிறுத்தப்படும். நேர்மை என்பது வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல; அச்சமற்ற விசாரணைகள், நியாயமான முடிவுகள் மூலமாக அது நிரூபிக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, சிறிய தவறான நடவடிக்கை கூட முழு நிறுவனத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் என்பதால், எந்தவித ஒழுக்கக்கேடுகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

திருக்குர்ஆனின் சூரா அல்-கஸஸ் அத்தியாயத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள “வலிமை”, “நம்பகத்தன்மை” என்ற இரண்டு உயரிய பண்புகளை MACC பணியாளர்கள் தங்களின் அடிப்படை மதிப்புகளாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் திறனும் தொழில்முறை நிபுணத்துவமும் “வலிமை”யைக் குறிக்கிறது; நேர்மையும் ஒழுக்கமும் “நம்பகத்தன்மை”யின் அடையாளமாகும். இந்த இரு பண்புகளும் இணைந்தால்தான் நாட்டின் நேர்மையைப் பாதுகாக்கும் முக்கிய தூணாக MACC தொடர்ந்து மதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இறுதியாக, கடமைகளை நிறைவேற்றும் போது ஆணவம், தற்பெருமையைத் தவிர்க்குமாறும், பொதுமக்களின் பார்வை எப்போதும் தங்கள் மீது இருப்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

“நீதியில் சமரசம் இல்லை. எந்தவொரு தலையீட்டையும் அல்லது சுயநல அழுத்தத்தையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல்தான் உண்மையான நேர்மையின் அளவுகோல்,” என்று அப்துல் ஹலீம் அமான் உறுதியாக தெரிவித்தார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset