நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுக்குமாடி குடியிருப்பில் உயரமான தளத்திலிருந்து விழுந்த இரு சிறுவர்கள்: ஒருவர் பலி 

ஜொகூர் பாரு: 

தம்பொயில் உள்ள Dwi Aliff Avenue அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், 8 வயது சிறுமி உயிரிழந்ததுடன், அவரது 10 வயது அண்ணன் என நம்பப்படும் சிறுவன் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று காலை 7.59 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், இரு குழந்தைகளும் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே, நீச்சல் குளம் அருகிலுள்ள பகுதியில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

கடுமையாக காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 10 வயது சிறுவன் தற்போது சுல்தானா அமினா மருத்துவமனையின் (HSA) தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தை வடக்கு ஜொகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ராடின் ரம்லான் ராடின் தாஹா உறுதிப்படுத்தியுள்ளதுடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சம்பவம் நிகழ்வதற்கு முன் நடந்த அதிர்ச்சி தருணங்களைச் சில குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர், தாம் குடும்பத்தினருடன் நீச்சல் குளம் அருகே இருந்தபோது திடீரென பலத்த சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, கீழே விழுந்த சிறுமி அசைவின்றி கிடந்ததைக் கண்டு, அங்கிருந்தவர்கள் உடனடியாக உதவி கோரி அலறியதுடன் அவசர சேவைகளையும் தொடர்புகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சில நொடிகளிலேயே மீண்டும் ஒரு பலத்த சத்தம் கேட்டதாகவும், பின்னர் சிறுவனும் அதே இடத்தில் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரும் வரை, பல குடியிருப்பாளர்கள் விரைந்து சென்று உதவி செய்ததாக கூறப்படுகிறது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset