செய்திகள் மலேசியா
6 மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம்?: 14 குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியர்
கிள்ளான்:
சபாக் பெர்ணாமில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 15 வயதுடைய ஆறு மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளை, 45 வயதுடைய ஆசிரியர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
இசை ஆசிரியரான இடி ஜொஹான் முஹம்மத் ஜொஹ்டி, நீதிபதி ஷரீஃபா ஹாஸ்சிண்டி சையத் ஒமர் முன்னிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றமற்றவர் எனத் தனது தரப்பை பதிவு செய்தார்.
குற்றப்பத்திரிகையின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர், ஆறு மாணவிகளுக்கு எதிராக பல்வேறு உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள், 2025 ஜனவரி முதல் 2026 பிப்ரவரி வரை, செகிஞ்சான், சபாக் பெர்ணாம் பகுதிகளில் உள்ள வகுப்பறை, இசை அறை, கணித அறை, இசைக் கருவிகள் சேமிப்பு அறை, வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, 2017 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a), பிரிவு 16(1) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி விதிக்கப்படலாம்.
மேலும், பிரிவு 16(1)-இன் கீழ் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வழக்கின் போது, துணை அரசு வழக்கறிஞர் நோர் சுஹைலி அபு பக்கார், ஜாமீன் வழங்க வேண்டாம் எனக் கோரியதுடன், வழங்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 20,000 ரிங்கிட் ஜாமீன் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொள்ளவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது என்றும், மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர் டத்தோ முஹம்மத் இம்ரான் தம்ரின், தனது வாடிக்கையாளருக்கு மனைவியும் பள்ளியில் படிக்கும் குழந்தையும் உள்ளதாகவும், அவருக்கு எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்றும் தெரிவித்ததுடன், ஜாமீன் தொகையைக் குறைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் 2002ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் எதிர்கொண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியில், அனைத்து 14 குற்றச்சாட்டுகளுக்கும் 30,000 ரிங்கிட் ஜாமீனில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதேவேளை, அரசுத் தரப்பு முன்வைத்த கூடுதல் நிபந்தனைகளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மேலும், தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 11:48 pm
பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது
June 8, 2026, 4:20 pm
அடுக்குமாடி குடியிருப்பில் உயரமான தளத்திலிருந்து விழுந்த இரு சிறுவர்கள்: ஒருவர் பலி
June 8, 2026, 1:47 pm
