செய்திகள் மலேசியா
புதிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அறிமுகம் திட்டமிட்டபடி தொடர்கிறது: உள்துறை அமைச்சர் உறுதி
புத்ராஜெயா:
நாட்டின் அடையாள ஆவணங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வடிவமைப்பிலான அடையாள அட்டை, மலேசிய சர்வதேச கடவுச்சீட்டு வெளியீட்டுத் திட்டம், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதியளித்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள அடையாள அட்டை, கடவுச்சீட்டு இருப்புகள் அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் போதுமானதாக இருப்பதால், புதிய விண்ணப்பதாரர்களுக்குத் தற்காலிகமாக தற்போதைய இருப்புகளே தொடர்ந்து வழங்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.
உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய பதிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பதற்காக தற்போது கையிருப்பில் உள்ள ஆவணங்களை வீணடிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
“புதிய அடையாள அட்டை, புதிய கடவுச்சீட்டு தொடர்பான இரு முக்கிய முன்னெடுப்புகளும் திட்டமிட்டபடி முன்னேறி வருகின்றன. இருப்பினும், இன்னும் பயன்பாட்டுக்கு உகந்த கையிருப்புகள் இருக்கும் நிலையில் அவற்றை புறக்கணிப்பது பொருத்தமல்ல,” என்றார் அவர்.
மேலும், 12 வயதை எட்டும் குழந்தைகளிடமிருந்து மாதந்தோறும் சுமார் 35,000 அடையாள அட்டை விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குறிப்பிட்ட அவர், தற்போது வழங்கப்படும் அடையாள அட்டைகள் நடைமுறையிலுள்ள ஒப்பந்தம், கையிருப்பின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
“தற்போதைய கையிருப்புகள் முழுமையாக பயன்படுத்தப்பட்ட பிறகே புதிய தலைமுறை அடையாள அட்டை, கடவுச்சீட்டு வெளியீட்டு முயற்சி அமல்படுத்தப்படும்,” என அவர் கூறினார்.
இதற்கு முன்னர், நாட்டின் அடையாள ஆவணங்களின் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய வடிவமைப்பிலான அடையாள அட்டை, கடவுச்சீட்டை மலேசியா அறிமுகப்படுத்தவுள்ளது என சைபுடின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 11:48 pm
பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது
June 8, 2026, 5:00 pm
6 மாணவிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம்?: 14 குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியர்
June 8, 2026, 4:20 pm
அடுக்குமாடி குடியிருப்பில் உயரமான தளத்திலிருந்து விழுந்த இரு சிறுவர்கள்: ஒருவர் பலி
June 8, 2026, 1:47 pm
