நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா குறித்து மலேசியா மௌனம் காக்காது: அமிருதீன் சூளுரை

செப்பாங்:

பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக மலேசியா தனது இராஜதந்திர அழுத்தத்தையும் சர்வதேச சட்டப் போராட்டத்தையும் மேலும் தீவிரப்படுத்தும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி தெரிவித்துள்ளார்.

GSF 2.0 மனிதாபிமானப் பயணம் நிறைவடைந்தாலும், “காசா விடுதலைக்கான போராட்டம் ஒருபோதும் நிற்காது” என அவர் உறுதியளித்தார்.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற மாநாட்டில் காசா பிரச்சினை உலக அரங்கில் வலுவாக முன்வைக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் அந்த மாநாட்டை மலேசியாவில் நடத்தும் முயற்சியும் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல இன, பல பின்னணிகளைச் சேர்ந்த மலேசிய மனிதாபிமான ஆர்வலர்கள், காசா மக்களுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து செயல்பட்டது நாட்டின் பெருமை என அமிருதீன் பாராட்டினார்.

அவர்களின் மீது உளவியல் அச்சுறுத்தல்கள் மட்டுமல்லாமல், உடல் ரீதியான தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“மலேசியா அமைதியாக இருக்காது. பாராளுமன்றமும் அமைதியாக இருக்காது. மனிதாபிமானத்திற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்,” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

காசா தொடர்பான தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து எம்.பிக்களும் அதற்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

மேலும், மனிதாபிமான ஆர்வலர்கள் மீது நிகழ்ந்ததாகக் கூறப்படும் கடத்தல், சித்திரவதை, சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சட்ட நிபுணர்கள் சேகரித்து வருவதாகவும், அந்த விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“காசாவை விடுவித்து, பல தசாப்தங்களாக நீடிக்கும் சியோனிச கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்,” என அமிருதீன் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset