நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்

கோலாலம்பூர்: 

உலகளாவிய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, வாழ்க்கைச் செலவழுத்தத்தைக் குறைக்கும் வகையில், பூடி மடானி டீசல் உதவியை மாதத்திற்கு 300 ரிங்கிட்டாகத் தொடரவும், தகுதியான பெறுநர்களுக்கு 100 ரிங்கிட் கூடுதல் இடைக்கால உதவியை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையானது மக்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாகும் என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மது நசிர் கூறினார்.

"அரசாங்கம், இலக்கு தலையீடுகளைத் தொடரும். இதில், பூடி மடானி டீசல் உதவியை மாதத்திற்கு 300 ரிங்கிட்டாகத் தொடர்வதும், தகுதியான பெறுநர்களுக்கு 100 ரிங்கிட் கூடுதல் இடைக்கால உதவியை வழங்குவதும் அடங்கும்" என்று அவர் இன்று உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மானிய டீசல் கட்டுப்பாட்டு முறைமையை (SKDS) மேம்படுத்துவதற்கான முன்மொழிவை, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவுத் துறை (கே.பி.டி.என்) மேலும் பின்தொடர வேண்டும் என்றும் தேசிய பொருளாதார நடவடிக்கை சபை (எம்டென்) ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

வணிக நடவடிக்கைகள், விநியோகச் சங்கிலியைப் பாதிக்காமல், கசிவுக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், டீசல் மானிய ஒதுக்கீட்டை சமநிலையான முறையில் ஒருங்கிணைப்பதே அந்த முன்மொழிவின் நோக்கம் என்றார் அவர்.

"ஏப்ரல் 9, 2026 வரையிலான மைசப்சிடி தரவுகளின் அடிப்படையில், SKDS-ன் கீழ் 398,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில், 375,500 க்கும் மேற்பட்ட நிலப் போக்குவரத்து சரக்கு வாகனங்களும், சுமார் 23,000 பொதுப் போக்குவரத்து வாகனங்களும் அடங்கும்" என்றார் அவர்.

மற்றொரு முன்னேற்றத்தில், ஒரு ஹெக்டேருக்கு 300 ரிங்கிட் என்ற உழவு ஊக்கத்தொகை இன்று விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள், விவசாயச் செயல்பாட்டுச் செலவுகள், நாட்டின் உணவு விநியோகச் சங்கிலியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முன்முயற்சி முக்கியமானது என்று அக்மல் நஸ்ருல்லா கூறினார்.

"இந்தத் திட்டம், கிராமப்புறங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தற்போதைய சந்தை விலையை விட ஐந்து முதல் 30 சதவீதம் வரை குறைந்த விலையில், அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியும்" என்றார் அவர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset