நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கழுத்தில் குத்தப்பட்ட பெண், 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர்ப்பிழைத்தார்

அலோர் ஸ்டார்: 

கெப்பாலா பத்தாஸ், தித்தி காஜாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே ஒரு காருக்குள், கழுத்தில் குத்தப்பட்ட ஒரு பெண் சுல்தானா பாஹியா மருத்துவமனையில் 10 மணி நேர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அறுவை சிகிச்சை நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 7 மணிக்கு முடிவுற்றதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி கூறினார். பாதிக்கப்பட்டவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"என் சகோதரி தற்போது, அவர் ஓய்வெடுக்கும் வகையில், சுவாசக் குழாய் பொருத்தப்பட்டு, மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார்" என்று இன்று இங்குள்ள குடும்ப இல்லத்தில் சந்தித்த போது அவர் கூறினார். மேலும், மேலதிக அறிக்கைகளை வெளியிட குடும்பம் தயாராக இல்லாததால், தனியுரிமையைக் கோரினார்.

தனது சகோதரி மருத்துவமனையில் குணமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவரின் இரண்டு குழந்தைகளையும் குடும்பம் பராமரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மெர்கோங்கில் உள்ள தாமான் விராவைச் சேர்ந்த அண்டை வீட்டார் ஒருவர், அந்தச் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்ததாகவும், ஆனால் அவர் அரிதாகவே வீட்டில் இருந்ததாகவும், அவர்கள் ஒருபோதும் பேசியதில்லை என்றும் அந்த அண்டை வீட்டார் கூறினார்.

கோத்தா செத்தார் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் சையது பஸ்ரி சையது அலி, பாதிக்கப்பட்டவர் தற்போது சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.19 மணிக்கு நிகழ்ந்ததாக முன்னர் செய்தி வெளியிடப்பட்டது. மேலும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் சென்று, நான்கு மணி நேரத்திற்கும் மேலாகிய பின்னர், 32 வயதுடைய சந்தேக நபர், தாமான் உடாவில் உள்ள ஒரு மசூதிப் பகுதியில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset