நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்நுட்பமே நாட்டின் எதிர்கால அஸ்திவாரம்: துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங்

கோலாலம்பூர்: 

நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு மிகவும் நிலையானதாகவும் பின்னடைவுடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக, மலேசியா ஒரு வர்த்தக நாடாக இருப்பதிலிருந்து ஒரு தொழில்நுட்ப நாடாக மாற வேண்டும்.

தொழில்நுட்பத்தை வைத்திருப்பதே, நாடு அதிக வருமானத்தை ஈட்டுவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குமான முக்கிய திறவுகோல் என்று துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங் கூறியுள்ளார்.

"நமது சொந்த தொழில்நுட்பத்தை நாம் வைத்திருக்கும்போது, அது மிக உயர்ந்த தொழில்நுட்பமாக இல்லாவிட்டாலும், தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதார வருமானத்தை நம்மால் மேலும் உருவாக்க முடியும்.

"இதனால் உள்ளூர் நிறுவனங்கள், பொறியாளர்கள், மலேசிய தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்" என்று 2026 ஆசியா வங்கி அதிகாரிகள் மாநாட்டின் கேள்வி-பதில் குழு அமர்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக விநியோகச் சங்கிலியில் மலேசியா ஒரு முக்கியமான இடைநிலையாகவும் திகழ்வதாக அவர் கூறினார்.

"கோவிட்-19 தொற்றுநோயின் போது மலேசியாவைச் சேர்ந்த விநியோகர்கள் இல்லாவிட்டால், டெட்ராய்டில் (அமெரிக்கா) கார் விநியோகச் சங்கிலியும், மலேசியாவில் இருந்து சிப்கள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும்" என்றார் அவர்.

மலேசியா ஒரு தொழில்நுட்ப சார்ந்த, உயர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாறுவதற்கான சரியான பாதையில் இருப்பதை அந்தச் சூழ்நிலை காட்டுவதாக அவர் மேலும் எடுத்துரைத்தார்.

அதனுடன், அதிகமான உள்ளூர் நிறுவனங்கள் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் உயர முடியும் என்பதற்காக, தற்போதுள்ள சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதும், மேம்படுத்துவதும் தற்போது அரசாங்கத்தின் பங்காகும் என்று லியூ கூறினார்.

ஆசியான் பிராந்தியத்தில் ஒரு நிலையான நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவதிலும், தொழில்நுட்பத்தின் மீதான ஆதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் மலேசியா பங்கானது மிகவும் முக்கியமானது என்று லியூ தெரிவித்தார்.

ஆசியானில் நடுத்தர வர்க்கத்தின் அதிகரித்து வரும் கொள்முதல் திறன், ஒரு வலுவான பிராந்தியச் சந்தையை உருவாக்கி, முக்கிய நுகர்வோர் சந்தையாக அமெரிக்காவின் மீதான சார்புநிலையைக் குறைக்கும் என்று லியூ கூறினார்.

"அதிகமான மலேசியர்கள் நடுத்தர வர்க்கத்தினராக மாறுவதை நாங்கள் நம்புகிறோம். மேலும், அதிகமான நடுத்தர வர்க்கச் சந்தையாக ஆசியான் வளர்வதால், அடுத்த 20 ஆண்டுகளில், முக்கியச் சந்தையாக அமெரிக்காவை நாம் மிகவும் நம்பியிருக்க மாட்டோம்" என்றார் அவர்.

எரிபொருள் மானியம், வாழ்க்கைச் செலவு பிரச்சினைகள் உள்ளிட்ட குறுகிய கால சவால்களை மலேசியா இன்னும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், அந்த பொருளாதார கட்டமைப்பு மாற்றம் எளிதானது அல்ல என்பதையும் அவர் நிராகரிக்கவில்லை.

இதற்கிடையில், தற்போதைய நெருக்கடியை, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சிறப்பாகவும், வலுவாகவும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக மலேசியா பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

"இந்த நெருக்கடியில் நாம் வலுவான நிலையில் நுழைகிறோம். இருப்பினும், மீட்சி, குறிப்பாக எரிசக்தித் துறையில், நீண்ட காலம் எடுக்கக்கூடும் என்பதையும் நாங்கள் அறிவோம்.

"எனவே, இந்த நெருக்கடியில் இருந்து மலேசியா ஒரு வலிமையான நாடாக வெளியேற வேண்டும்" என்றார் அவர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset