செய்திகள் மலேசியா
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
செர்டாங்:
ரோன்95 எரிபொருள் மானிய மறுசீரமைப்பு விவகாரம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், T20 வருமானக் குழுவினருக்கான மானியத்தை தற்போதைக்கு நீக்கும் திட்டம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தியுள்ளார்.
மலேசிய வணிக வாகன கண்காட்சி 2026 நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இப்போதைக்கு நிலைமை மாற்றமின்றி தொடர்கிறது. மானியப் பகுத்தறிவு குறித்து அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. ஆனால் மக்களுக்கு சிக்கல் இல்லாத, எளிமையான, நேரடி முறையையே அரசாங்கம் விரும்புகிறது” என அவர் தெரிவித்தார்.
பூடி95 முறைமை அனைத்து மலேசியர்களும் தங்களது மைகார்ட் அட்டையைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் மானியத்தை எளிதாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மானிய கசிவுகளைக் குறைக்கும் பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளதாக கூறப்பட்டது.
“மக்களை சிரமப்படுத்தும் சிக்கலான அமைப்பை அரசு விரும்பவில்லை. அமைச்சரவை நீண்டகாலமாக இதை ஆராய்ந்து வருகிறது. தற்போது T20 குழுவுக்கான மானியத்தை நீக்குவது பற்றிய கேள்வியே எழவில்லை,” என அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து அரசியல்,பொருளாதார வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. அம்னோ பொதுச் செயலாளர் டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி துசூகி, புள்ளிவிவரங்களில் உயர் வருமானக் குழுவாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், பல M40, கீழ்மட்ட T20 குடும்பங்கள் இன்னும் கடுமையான நிதிச் சுமையுடன் போராடி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யியோ பீ யின், “இது மானியத்தை திரும்பப் பெற சரியான நேரமல்ல” என எச்சரிக்கை விடுத்துள்ளார். உயர்வருமானக் குழுவிலிருந்து ரோன்95 மானியம் நீக்கப்பட்டால், அதன் தாக்கம் பரவலான பணவீக்கம், பொருளாதார அழுத்தங்களை உருவாக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எரிபொருள் மானிய மறுசீரமைப்பு திட்டம் இன்னும் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த மதிப்பீட்டின்படி, T20 குழுவை பூடி95 மானியத் திட்டத்திலிருந்து நீக்கினால், அரசாங்கத்திற்கு மாதந்தோறும் சுமார் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
டீசல் மானிய விநியோகத்தில் சில தரப்பினர் விடுபடுவது குறித்த கேள்விகளுக்கும் அந்தோணி லோக் பதிலளித்தார். “100 சதவீதம் அனைவரையும் உள்ளடக்கும் முறைமை எதுவும் உலகில் இல்லை. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்கள், முக்கிய தொழில்துறைகள் பெரும்பாலும் தற்போதைய மானிய அமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
மேலும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான வணிக வாகனங்கள் மானிய விலையில் டீசலைப் பெற்று வருவதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக டீசல் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 3:42 pm
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
May 14, 2026, 2:32 pm
தென்மேற்கு பருவமழை தொடக்கம்: மலேசியர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை
May 14, 2026, 12:46 pm
