நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்

கோலாலம்பூர்:

மலேசிய பூப்பந்து உலகின் மறக்க முடியாத புராண நாயகர்களில் ஒருவரும், 1967 தாமஸ் கோப்பை வெற்றி அணியின் தலைவருமான டத்தோ தே கியூ சான், பினாங்கின் ஜார்ஜ் டவுனில் காலமானார். அவருக்கு வயது 91.

அவரது மறைவு, மலேசிய விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனைவி என்ஜி மெய் லிங், மகன் தாமஸ் தே, மகள் கரேன் தே ஆகியோரை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

மலேசிய பூப்பந்தின் “பொற்கால போர்வீரர்” என போற்றப்பட்ட கியூ சான், ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளிலும் அபார சாதனைகளைப் புரிந்தவர். ஆனால், அவரின் பெயரை நிரந்தரமாக வரலாற்றில் பொறித்த தருணம் 1967 தாமஸ் கோப்பை வெற்றியே என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணியை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்ற அவரது தலைமைத்துவம், இன்னமும் மலேசிய விளையாட்டு வரலாற்றின் தங்க அத்தியாயமாக பேசப்படுகிறது. தாமஸ் கோப்பையின் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றை வெளிப்படுத்தும் வகையில், தனது மகனுக்கே “தாமஸ்” என்று பெயரிட்டிருந்தார்.

1958, 1961, 1964, 1967 ஆகிய நான்கு தொடர்ச்சியான தாமஸ் கோப்பைப் பிரசாரங்களில் அவர் மலேசியாவுக்காக விளையாடியிருந்தார் என்பது அவரது அர்ப்பணிப்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் லிம் சே ஹப்புடன் இணைந்த அவரது கூட்டணி, அந்நாளைய பூப்பந்து உலகையே அச்சுறுத்திய ஜோடியாக திகழ்ந்தது. 1959 ஆம் ஆண்டு மதிப்புமிக்க ஆல் இங்கிலாந்து பட்டத்தையும், உலக அழைப்புப் போட்டி சாம்பியன் பட்டத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.

அதேபோல், 1957, 1959, 1960 ஆண்டுகளில் மலேசியா ஓபன் பட்டங்களை வென்ற அவர், 1962-ல் ஜார்ஜ் யாப்புடன் இணைந்து மேலும் ஒரு பட்டத்தைச் சேர்த்தார்.

ஒற்றையர் பிரிவிலும் மின்னல் வேக ஆட்டத்தால் ரசிகர்களை மயக்கிய கியூ சான், 1962 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷி, மெக்சிகோ சர்வதேச பட்டங்களை வென்று தனது ஆதிக்கத்தை நிரூபித்தார்.

விளையாட்டு அரங்கில் அவரது சுறுசுறுப்பு, மின்னல் வேக நகர்வு, அசாதாரண திறமை காரணமாக, அவர் மலேசிய பூப்பந்தின் மறக்க முடியாத சின்னமாக உயர்ந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவிலும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தனது மனைவி மெய் லிங்குடன் இணைந்து 1962, 1963 மலேசியா ஓபன் பட்டங்களை வென்றார். மேலும், 1965 பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ரோசலின்ட் சிங்கா ஆங்குடன் இணைந்து தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.

ஒரு காலத்தை ஆண்ட பூப்பந்து மாமன்னன் இன்று இல்லை. ஆனால், அவரது சாதனைகள், தலைமைத்துவம், மலேசிய விளையாட்டிற்காக அவர் அர்ப்பணித்த வாழ்க்கை என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset