செய்திகள் மலேசியா
வரலாற்றின் கறுப்புப் பக்கமான மே 13: பன்முகத்தன்மையே நாட்டின் பலம்
கோலாலம்பூர்:
மே 13 1969, மலேசிய வரலாற்றின் இருண்ட இரவாக என்றும் நினைவில் நிற்கும் அந்த இனக் கலவரம், வெறும் வரலாற்றுச் சம்பவமல்ல; தேசிய ஒற்றுமை சிதைந்தால் நிகழும் பேரழிவு என்ன என்பதற்கான எச்சரிக்கை மணியாகும்.
அந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 196 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து, வீடுகளை இழந்து, மன உளைச்சலுடன் வாழ நேரிட்டது. ஐந்து தசாப்தங்கள் கடந்தாலும், அந்த வலி இன்னும் நாட்டின் நினைவகத்தில் அழியாத காயமாகவே உள்ளது.
இன்றைய மலேசியா, 34 மில்லியனுக்கும் அதிகமான பல இன, மத மக்களைக் கொண்ட நாடாக வளர்ந்துள்ள நிலையில், சமூக ஊடகங்கள், டிஜிட்டல் அரசியல், கட்டுப்பாடற்ற தகவல் பரவல் ஆகியவை ஒற்றுமைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன வெறுப்பு, மத அவமதிப்பு, தவறான தகவல், தூண்டுதல் கருத்துகள் என இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் கணநேரத்தில் பரவுகின்றன. குறிப்பாக, சில இளைஞர்கள் இன உணர்வுகளை நகைச்சுவை அல்லது கேலிக்குரிய விஷயமாகக் காணத் தொடங்கியிருப்பது கவலைக்கிடமானதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“வெறுப்புச் சொற்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் தீப்பொறியாக மாறும்” என்ற எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை மலேசியர்கள் நினைவுக்கூர வலியுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, குடும்பம், பள்ளி, சமூகம் ஆகியவற்றின் மூலம் மரியாதை, சகிப்புத்தன்மை, மனிதாபிமானம் போன்ற பண்புகள் சிறுவயதிலிருந்தே விதைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தகவல்களை பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது இன்றைய டிஜிட்டல் உலகில் மிகவும் அவசியமானதாக விளக்கப்பட்டுள்ளது.
வேறுபாடுகளை அழிப்பது அல்ல ஒற்றுமை; வேறுபாடுகளுடன் மரியாதையோடு வாழ்வதே உண்மையான ஒற்றுமை என பல்வேறு இன, மத மக்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைதியாக வாழ்ந்த மதீனா சமூகத்தின் எடுத்துக்காட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரசியல் லாபத்திற்காக இன உணர்வுகளைத் தூண்டும் பேச்சுகள் சமூகத்தின் பழைய காயங்களை மீண்டும் திறக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஊடகங்கள் தூண்டுதல் கருவியாக அல்லாது, ஒற்றுமைக்கான பாலமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மே 13” ஒரு வரலாறு அல்ல, எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு கருப்பு தினம் நாட்டில் நிகழாமல் இருப்பதைத் தடுப்பது அனைத்து மலேசியர்களின் முக்கிய பொறுப்பாகப் பார்க்கப்பட வேண்டும்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 9:59 am
பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 பேர் பலி: பெட்ரோனாஸ் அறிவிப்பு
May 24, 2026, 10:51 pm
கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
May 24, 2026, 12:55 pm
