செய்திகள் மலேசியா
டி.ஏ.பி யில் வேகமெடுக்கும் அரசியல் சுனாமி?: அந்தோணி லோக், லிம் குவான் எங் இடையேயான மறைமுக போட்டி
கோலாலம்பூர்:
“ஒரே மலையில் இரண்டு புலிகள் நீண்ட காலம் வாழ முடியாது” என்ற சீனப் பழமொழி, தற்போது டி.ஏ.பி. கட்சியின் உள்கட்டமைப்பு அரசியலில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் அந்தோணி லோக், முன்னாள் மூத்த தலைவர் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையேயான அரசியல் செல்வாக்குப் போட்டி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் கிளம்பியுள்ளன.
2018ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பின்னர், அந்தோணி லோக்கின் அரசியல் செல்வாக்கு டி.ஏ.பி.-யில் வேகமாக உயரத் தொடங்கியது என அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, 2022 பொதுத் தேர்தலில் டி.ஏ.பி. பெற்ற வலுவான வெற்றி, அந்தோணி லோக்கின் தலைமையைக் கட்சிக்குள் உறுதிப்படுத்திய முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி.ஏ.பி. கட்சித் தேர்தலிலும், லிம் குவான் எங் அணியினர் பலர் மத்திய செயற்குழுவில் இடம்பிடிக்கத் தவறிய நிலையில், கட்சியின் அதிகார மையம் முழுமையாக அந்தோணி லோக் அணிக்குச் சென்றது.
இருப்பினும், சமீபகால அரசியல் சூழ்நிலைகள், குறிப்பாக யூ.ஏ.சி அங்கீகாரம், தேசிய கல்விக் கொள்கை, நெகிரி செம்பிலான் அரசியல் பதற்றம் போன்ற விவகாரங்கள், டி.ஏ.பி. ஆதரவாளர்களிடையே புதிய அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒற்றுமை அரசாங்கத்தில் டி.ஏ.பி. மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருந்தாலும், அம்னோவுடன் ஒப்பிடுகையில் குறைந்த அரசியல் பலன்களையே பெற்றுள்ளதாக சில தரப்புகள் விமர்சிக்கின்றன.
இதன் மத்தியில், லிம் குவான் எங் சமீபத்தில் பாரிசான் நேஷனல், அம்னோவை “நம்பகமற்ற கூட்டாளிகள்” எனக் கடுமையாக விமர்சித்தது, கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களிடையே எதிரொலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, அரசியல் நிலைத்தன்மையே முன்னுரிமை என வலியுறுத்தி, அமைதியான அணுகுமுறையை எடுத்துள்ள அந்தோணி லோக்கின் நிலைப்பாடும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, டி.ஏ.பி. தற்போது “வெற்றியை விரிவுபடுத்தும் கட்டத்திலா அல்லது சேதத்தை கட்டுப்படுத்தும் கட்டத்திலா?” என்ற கேள்வி கட்சிக்குள் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், கட்சியின் எதிர்கால திசை, தலைமைச் செல்வாக்கு குறித்து பல்வேறு அரசியல் ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.
எனினும், டி.ஏ.பி. தலைமையிலிருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ மோதல் அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 12, 2026, 4:47 pm
வெள்ளத் தடுப்பு கட்டுமானங்களுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் ஹன்னா யோஹ்
May 12, 2026, 12:40 pm
