நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியாகத்தின் மறுபெயர் செவிலியர்கள்: பிரதமரின் உருக்கமான வாழ்த்து 

கோலாலம்பூர்:

“மனிதன் இந்த உலகில் பிறக்கும் முதல் நொடியிலிருந்து, வாழ்க்கையின் இறுதி தருணம் வரை அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டு காக்கும் கரங்கள் செவிலியர்களுடையவை”. மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுபூர்வமான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

தாயின் பிரசவ வேதனையின் தருணத்திலும், குழந்தையின் முதல் அழுகையிலும், நோயின் வேதனையில் தவிக்கும் காலங்களிலும், மனித வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியான தருணத்திலும் செவிலியர்கள் அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டு அருகில் நிற்பவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

“நோயின் வலியில் தவிக்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் அளிப்பதும், பயம் சூழ்ந்த குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதும், பதற்றத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு நம்பிக்கையூட்டுவதும் செவிலியர்களின் அளவிட முடியாத மனிதநேய சேவையாகும்,” என்று பிரதமர் தனது பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், செவிலியர்களின் அனுபவம், பொறுமை, நுணுக்கமான கவனம், அர்ப்பணிப்பு ஆகியவை மருத்துவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதில் உதவிக்கரம் புரிகின்றன என்றும் அவர் பாராட்டினார்.

செவிலியர் தொழில் என்பது வெறும் வேலை அல்ல; தியாகம், மன உறுதி, கருணை, தூய்மையான இதயத்தைத் தேடும் உயரிய சேவை என அன்வர் வலியுறுத்தினார். 

“அவர்களின் சேவையின் மகத்துவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நாட்டிற்கும் மக்களுக்கும் அவர்கள் ஆற்றும் பணி அளவிட முடியாத அர்ப்பணிப்பாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, “உங்களின் அளவற்ற சேவைக்கும் தியாகத்திற்கும் நன்றி. உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்,” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

பிரதமரின் இந்த உணர்வுபூர்வமான பதிவு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், செவிலியர்களின் அர்ப்பணிப்பான சேவையை நினைவுகூரும் வகையில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset