நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோன்95 மானியக் குறைப்பு அவசர முடிவாக மாறக்கூடாது: அரசுக்கு பொருளாதார நிபுணர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா:

எரிபொருள் மானியக் குறைப்பில் அரசாங்கம் அவசர முடிவுகளை எடுக்கக்கூடாது என பொருளாதார நிபுணர்களும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். குறிப்பாக, பூடி மடானி 95 திட்டத்தின் கீழ் உயர் வருமானம் பெறும் T20 குழுவினரை நீக்குவது, நாடு முழுவதும் வாழ்க்கைச் செலவில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மலேசிய சீன வர்த்தக, தொழில்துறை சங்கங்களின் (ஏ.சி.சி.சி.ஐ.எம்.) பொருளாளர் ஜெனரல் டத்தோ கூங் லின் லூங், “T20-ஐ வெட்டிவிடலாம் என்று எளிதாக முடிவு செய்ய முடியாது; மலேசியாவின் பொருளாதார சூழல் மிகவும் பல்வகைமையானது” என்று வலியுறுத்தினார்.

கிளாந்தானில் கிடைக்கும் 1,000 ரிங்கிட் வருமானத்தின் மதிப்பும், கோலாலம்பூரில் அதே தொகையின் மதிப்பும் முற்றிலும் வேறுபடுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

 மேலும், “மொத்த வருமானத்தை மட்டும் பார்க்க முடியாது; அத்தியாவசியச் செலவுகளுக்குப் பிறகு மக்களிடம் எவ்வளவு பணம் மீதமிருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரங்களில் வாழ்வது இன்று மிகப்பெரிய பொருளாதாரப் போராட்டமாக மாறியுள்ளது” என்றார் அவர்.

இதற்கு மாறாக, பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம், T20 குழுவை மானியத்திலிருந்து நீக்கும் அரசின் முயற்சியை முழுமையாக ஆதரித்துள்ளார். 

மாதத்திற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் வரை அரசாங்கம் சேமிக்க முடியும் என்றும், அந்த நிதியை சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கு திருப்பிச் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். “உயர் வருமானம் பெறுவோருக்கும் ஒரே மாதிரியான மானியம் வழங்குவது தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்றும் அவர் சாடினார்.

இதற்கிடையில், T20 குழுவினருக்கான ரோன்95 மானிய ஒதுக்கீட்டை 150 லிட்டராகக் குறைக்கும் சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடாசன், “மானியங்களை வெட்டுவதற்குப் பதிலாக, அரசாங்கம் முதலில் செலவுக் கட்டுப்பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும். அலுவலக மின்சாரச் சேமிப்பு போன்ற மாற்று வழிகளும் உள்ளன” எனக் குறிப்பிட்டார். மக்களிடையே நடத்தை மாற்றமும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் கிள்ளான் எம்.பி. வி. கணபதிராவ், “விரிவான ஆய்வின்றி எடுக்கப்படும் அவசர முடிவுகள் வணிகங்களையும் சாதாரண மக்களையும் பாதிக்கும்” என்று எச்சரித்தார். T20, M40 பிரிவுகளைத் தெளிவாக வரையறுக்க விரிவான தரவுகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset