நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவ சுற்றுலாத் துறையில் பினாங்கு மாநிலம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது; 1.136 பில்லியன் ரிங்கிட் வரையிலான வருவாயை பினாங்கு ஈட்டியுள்ளது: வோங் ஹான் வாய்

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு அதன் மருத்துவ சுற்றுலாத் துறையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2025-ல் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 527,176 ஆக உயர்ந்துள்ளது.

சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரத்திற்கான மாநில நிர்வாக கவுன்சிலர் வோங் ஹான் வாய், இது முந்தைய ஆண்டை விட 25.94 சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது என்று கூறினார்.

"மருத்துவ சுற்றுலாவின் வளர்ச்சியானது RM1.136 பில்லியன் வரையிலான வருவாயை ஈட்டியுள்ளது, இது 2024-ல் இருந்த RM898.07 மில்லியனுடன் ஒப்பிடும்போது 26.6 சதவிகித வருடாந்திர அதிகரிப்பாகும்," என்று அவர் இன்று மாநில சட்டமன்றத்தில் ஓங் ஆ தியோங்கின் (PH-பத்து லங்காங்) கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறினார்.

மாநிலத்தில் உள்ள 16 தனியார் மருத்துவமனைகளை உள்ளடக்கிய பினாங்கு மருத்துவ சுற்றுலா மையத்தின் (PMED) தரவுகளின்படி, 2024-ல் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 418,608 ஆக இருந்தது என்று அவர் கூறினார்.

"2025-ல், வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 527,176 ஆக உயர்ந்துள்ளது, இது 25.94 சதவிகித உயர்வைக் குறிக்கிறது," என்று அவர் கூறினார்.

2026-ஆம் ஆண்டின் மலேசிய மருத்துவ சுற்றுலா ஆண்டிற்கு (MYMT) முன்னதாக, இத் துறையை மேலும் வலுப்படுத்த அரசு பல உத்திகளை வகுத்துள்ளதாக வோங் கூறினார்.

அதிக மருத்துவ சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, 'போர்டிங் பாஸ் சலுகைகள்' திட்டத்தின் மூலம் ஏர்ஏசியா போன்ற விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதும் இந்த முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

"இந்தத் திட்டத்தின் மூலம், மலேசியாவிற்கு வெளியே இருந்து போர்டிங் பாஸ்களை வைத்திருக்கும் பயணிகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் வைத்திருந்தால், சுகாதாரப் பரிசோதனைத் தொகுப்புகளுக்கு 15 சதவீத தள்ளுபடியைப் பெறலாம்," என்று அவர் கூறினார்.

மேலும், 'இந்தோனேசிய தரநிலை' (QRIS) குறியீட்டின் மூலம், இந்தோனேசிய ரூபியா உட்பட நோயாளிகளின் தாய்நாட்டு நாணயங்களில் பணம் செலுத்தும் வசதிகளையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

"இது, நோயாளிகள் பணம் செலுத்தும் தொகையை நேரடியாகத் தங்கள் தாய்நாட்டு நாணயத்தில் பார்க்கவும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை விடக் குறைந்த அந்நியச் செலாவணி விகிதங்களைப் பெறவும் அனுமதிக்கிறது," என்று அவர் கூறினார்.

பினாங்கு குளோபல் டூரிசம், மலேசியா ஹெல்த்கேர் டிராவல் கவுன்சில், டூரிசம் மலேசியா ஆகியவற்றுடன் இணைந்து, சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தைவான், மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளில் பினாங்கு மருத்துவ சுற்றுலாவை தீவிரமாக ஊக்குவித்து வருவதாகவும் வோங் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset