நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

53 அம்சங்கள் கொண்ட புதிய மைகார்ட் அறிமுகம்; உடனடியாக மாற்ற அவசியமில்லை: உள்துறை அமைச்சர் சைஃபுதீன்

ஜொகூர் பாரு: 

வரும் ஜூன் 1 முதல் புதிய தலைமுறை மைகார்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், தற்போதைய மைகார்ட் வைத்திருக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக தங்களது அடையாள அட்டைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சு (கே.டி.என்) தெளிவுபடுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில், நாட்டின் சட்டத்தின்படி ஒவ்வொரு மலேசிய குடிமகனும் 12 வயதை எட்டியதும் மைகார்ட் வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே கட்டாயம் என்றும், ஏற்கனவே மைகார்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் புதிய அட்டைக்கு மாற்ற வேண்டும் என்ற விதிமுறை இல்லை என்றும் விளக்கமளித்தார்.

புதிய தலைமுறை மைகார்ட் அறிமுகப்படுத்தப்படுவதன் முக்கிய நோக்கம், நாட்டின் அடையாள ஆவண பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாகும். அதற்காக, உலகத் தரத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

“தற்போது 20 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் மைகார்ட் பயன்படுத்துகின்றனர். எனவே, ஜூன் 1 அன்று அனைவரும் ஒரே நேரத்தில் தேசியப் பதிவுத்துறைக்குச் சென்று மாற்ற முயற்சிக்க வேண்டாம். மக்கள் பொறுமையாக, படிப்படியாக மாற்றிக் கொள்ளலாம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

ஜொகூர் பாரு – சிங்கப்பூர் ஆர்டிஎஸ் லிங்க் திட்டத்தின் முன்னேற்றத்தை, புக்கிட் சாகார் நிலையத்தில் உள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல், பாதுகாப்பு வளாகத்தில் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கு முன்னர், தேசியப் பதிவுத்துறை தலைமை இயக்குநர் பத்ருல் ஹிஷாம் அலியாஸ் வெளியிட்ட தகவலின்படி, புதிய மைகார்ட்டில் மொத்தம் 53 அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. தற்போதைய மைகார்ட்டில் 23 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பாதுகாப்பு அம்சங்களில் லேசர் பொறித்தல், அல்ட்ரா வயலெட் அடையாளம், ஹோலோகிராம், கில்லோஷ் வடிவமைப்பு, மைக்ரோ உரை, அமலாக்க நோக்கத்திற்கான QR குறியீடு, மேம்பட்ட குறியாக்க பாதுகாப்புடன் கூடிய சிப் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இது, போலி அடையாள அட்டைகள், ஆவண மோசடிகளுக்கு எதிரான சக்திவாய்ந்த கவசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset