நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைபர்ஜெயாவில் அதிரடி குடிநுழைவு சோதனை: 13 வெளிநாட்டவர்கள் சிக்கினர்

கோலாலம்பூர்: 

சைபர்ஜெயாவில் நடத்தப்பட்ட அதிரடி ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 13 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களுடன் ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, புதன்கிழமை (மே 6) இரவு சுமார் 9 மணியளவில் சைபர்ஜெயாவில் உள்ள மெனாரா பரகனில் இந்த அதிரடி சோதனை முன்னெடுக்கப்பட்டது என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸகரியா ஷாபான் தெரிவித்தார். 

“சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தி தங்கவைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட உணவகங்கள், மளிகைக் கடைகள், விற்பனை மையங்கள், பிற வணிக வளாகங்கள் உட்பட மொத்தம் 16 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

“இந்த நடவடிக்கையின் போது, 105 வெளிநாட்டவர்களும் 89 மலேசியர்களும் சோதனை செய்யப்பட்டனர்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், 26 முதல் 35 வயதுக்குட்பட்ட 13 வெளிநாட்டவர்கள் பல்வேறு குடிநுழைவு சட்ட மீறல்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“கைது செய்யப்பட்டவர்களில் சூடான், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர்.

“விசாரணைக்கு உதவும் வகையில், உள்ளூர் நபர் ஒருவருக்கும் படிவம் 29-ன் கீழ் சாட்சி ஆஜர் ஆக உத்தரவு வழங்கப்பட்டது,” என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணை, சட்ட நடவடிக்கைகளுக்காக புத்ராஜெயா குடிநுழைவு தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஸகரியா தெரிவித்தார்.

“விசா காலாவதியான பிறகும் நாட்டில் தங்குபவர்கள், அனுமதிச் சீட்டுகளை தவறாக பயன்படுத்துபவர்கள் அல்லது சட்டவிரோதமாக வசிப்பவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

“சட்டவிரோத குடியேறிகளை தங்கவைத்தோ, வேலைக்கு அமர்த்தியோ இருப்பது கண்டறியப்படும் முதலாளிகள், தனிநபர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்,” என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

இந்த மிகப்பெரிய அமலாக்க நடவடிக்கையில், 83 குடிநுழைவுத் துறை அதிகாரிகளுடன், உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் 15 அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset