செய்திகள் மலேசியா
ஹாண்டா வைரஸ் அச்சம் கிளப்பிய சொகுசுக் கப்பலில் மலேசியர்கள் இல்லை: அமைச்சர் ஸுல்கிஃப்லி உறுதி
பெட்டாலிங் ஜெயா:
உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள கொடிய ஹாண்டா வைரஸ் பரவல் தொடர்பாக, அந்த வைரஸ் தாக்கம் பதிவான எம்வி ஹோண்டியுஸ் சொகுசுக் கப்பலில் எந்த மலேசியர்களும் இல்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஸுல் கிஃப்லி அஹ்மத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தக் கப்பலில் ஏற்பட்ட வைரஸ் பரவல் குறித்து சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், கப்பலில் இருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த இரு பணியாளர்கள் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் என உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. மலேசியர்கள் இதில் பாதிக்கப்படவில்லை என்றாலும், உலக, பிராந்திய அளவிலான முன்னேற்றங்களை சுகாதார அமைச்சு தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, சுகாதார அமைப்புகள் மிக உயர்ந்த தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வோம்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்த வைரஸை பொதுமக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, ஹாண்டா வைரஸ் நுரையீரல் பாதிப்பு நோயின் மரண விகிதம் 30 முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் என்பதால், இது உயிரைப் பறிக்கும் அபாயகரமான தொற்றாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்து எதுவும் இல்லாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளும் சுய பாதுகாப்பும் மட்டுமே மிக வலுவான ஆயுதம் என்று அவர் வலியுறுத்தினார். “பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” எனக் கூறிய அவர், வீடுகள் மற்றும் பணியிடங்களை எலிகள், பூச்சி தொல்லையின்றி சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தினார்.
சுகாதார அதிகாரிகள், இந்தத் தொற்றுக்குக் காரணமானது ஆண்டிஸ் வகை ஹாண்டா வைரஸ் என அடையாளம் கண்டுள்ளனர். இது மிகவும் அபூர்வமானது. ஏனெனில், நெருங்கிய, நீண்ட நேர மனித தொடர்புகளின் மூலமும் பரவக்கூடிய தன்மை இதற்கு உள்ளது. பொதுவாக, இந்த நோய் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர், கழிவு அல்லது உமிழ்நீரின் மூலம் பரவுவது வழக்கமாகும்.
இந்த வைரஸ் பரவலைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் அந்தக் கப்பலில் பயணித்தவர்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்தப் பரவலில், நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியர், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது கேப் வெர்டேயிலிருந்து ஸ்பெயினின் டெனெரிஃபே தீவை நோக்கிப் பயணித்து வரும் எம்வி ஹோண்டியுஸ் கப்பலில் ஏற்பட்ட இந்த வைரஸ் பரவல், உரிய பொது சுகாதார நடவடிக்கைகள் சரியாக அமல்படுத்தப்பட்டால் கட்டுப்படுத்தப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 5:39 pm
சைபர்ஜெயாவில் அதிரடி குடிநுழைவு சோதனை: 13 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
May 8, 2026, 5:10 pm
ஆயர் தாவாரில் கொடூரக் கொள்ளை: கடினமான பொருளால் தாக்கப்பட்ட முதிய ஜோடி
May 8, 2026, 4:29 pm
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழையால் திடீர் வெள்ளம்
May 8, 2026, 3:08 pm
