செய்திகள் மலேசியா
போதை மயக்கத்தில் பாய்ந்த மரண லாரி: ஐந்து மாத பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த கொடூர விபத்து
பாலிங்:
ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிப் பயணம், கணநேரத்தில் இரத்தக் கண்ணீராக மாறிய துயர சம்பவம் பாலிங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர், பெரோடுவா மைவி காரின் பின்புறத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதில், வெறும் ஐந்து மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த கோர விபத்தில், குழந்தையின் பெற்றோரும் காயமடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. மூன்று பேர் கொண்ட குடும்பம் கிளாந்தானிலிருந்து பினாங்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது.
பாலிங் போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ, இன்று அதிகாலை 12.20 மணியளவில் பாலிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறு குழந்தை, கடுமையான காயங்களால் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
“27 வயதுடைய ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், அவரது 41 வயது மனைவி, ஐந்து மாத குழந்தையுடன் கெரிக்கிலிருந்து கூபாங் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அதே திசையில் வந்த 43 வயதுடைய லாரி ஓட்டுநர் காரின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
விபத்தின் உண்மையான காரணம் குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தீயணைப்பு, மீட்புத் துறை, லாரி காரின் பின்புறத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது. விபத்தின் தாக்கம் மிக மோசமாக இருந்ததால், கார் கடுமையாக சேதமடைந்தது.
இந்த பேரழிவின் மத்தியில், பொதுமக்கள் மனிதாபிமானத்துடன் உடனடியாக உதவிக்குத் துரிதமாக வந்தனர். காரில் சிக்கியிருந்த பெண்ணையும் குழந்தையையும் அவர்கள் மீட்டனர். அதேவேளை, தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையை கடும் போராட்டத்திற்குப் பிறகு வெளியேற்றினர். ஆனால் இந்த கொடூர விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர் எந்தக் காயமும் இன்றி தப்பியுள்ளார்.
குழந்தையின் பெற்றோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் வாழ்க்கையை இன்னும் முழுமையாக அறிந்துகொள்ளாத அந்த ஐந்து மாத பச்சிளம் குழந்தை, கடுமையான காயங்களால் உயிரிழந்தது, அனைவரின் மனதையும் நொறுக்கியுள்ளது.
“சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று பிராண்டன் தெரிவித்தார். இந்த தகவல், சமூகத்தில் மேலும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மரணத்தை விளைவிக்கும் வகையில் போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1) கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 100,000 ரிங்கிட் வரை அபராதம், 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் தகுதி நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.
விசாரணைக்கு உதவும் வகையில், லாரி ஓட்டுநர் இன்று முதல் நான்கு நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராண்டன் மேலும் கூறினார். இந்த சம்பவம், போதைப்பொருள், பொறுப்பற்ற வாகன ஓட்டம் எத்தனை நிர்பராத உயிர்களை கணநேரத்தில் காவுகொள்ள முடியும் என்பதற்கான இன்னொரு மனதை பதறவைக்கும் நினைவூட்டலாக மாறியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 5:39 pm
சைபர்ஜெயாவில் அதிரடி குடிநுழைவு சோதனை: 13 வெளிநாட்டவர்கள் சிக்கினர்
May 8, 2026, 5:10 pm
ஆயர் தாவாரில் கொடூரக் கொள்ளை: கடினமான பொருளால் தாக்கப்பட்ட முதிய ஜோடி
May 8, 2026, 4:29 pm
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல இடங்களில் கனமழையால் திடீர் வெள்ளம்
May 8, 2026, 3:08 pm
